ஹேசில்வுட்டின் ஓவர் திருப்புமுனையாக அமைந்தது - ராஜத் படிதர்!

Updated: Sat, Mar 29 2025 10:09 IST
Image Source: Google

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. சேப்பாக்கில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியில் தொடக்க வீரர்கள் பில் சால்ட் 32 ரன்களையும், விராட் கோலி 31 ரன்களையும் சேர்க்க, அணியின் கேப்டன் ரஜத் படிதர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 51 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசி அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன் காரணமாக ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது. 

சிஎஸ்கே அணி தரப்பில் நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணியில் ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 41 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மகேந்திர சிங் தோனி 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். 

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆர்சிபி தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவிய ரஜத் படிதர் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ரஜத் படிதர், “இந்தப் போட்டியைப் பற்றி நான் பேசினால், இந்த மைதானத்தில் இது ஒரு நல்ல ஸ்கோராக இருந்தது, ஏனெனில் பந்து சிறிது நேரம் நின்று வந்தது, மேலும் பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடிப்பது எளிதாக இல்லை. ரசிகர்கள், அவர்கள் தங்கள் அணிகளை ஆதரிக்கும் விதம் காரணமாக சேப்பாக்கத்தில் விளையாடுவது எப்போதும் சிறப்பு வாய்ந்தது. மேற்கொண்டு இந்த போட்டியில் ஜோஷ் ஹேசில்வுட் அபாரமாக பந்துவீசினார். 

ஏனெனில் நாங்கள் முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. பந்து எளிதில் பேட்டிற்கு வராததால், அவர்கள் அதை எப்படி ஹார்ட் லெந்தில் வைத்திருந்தார்கள் என்பதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது, அதனால் ஆரம்ப கட்டத்தில் எனது சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்த முடியும் என்பதை நான் மனதில் வைத்திருந்தேன்.

Also Read: Funding To Save Test Cricket

குறிப்பாக, லிவிங்ஸ்டோன், அவர் வந்து நான்கு ஓவர்கள் வீசிய விதம் நம்பமுடியாததாக இருந்தது. இந்த போட்டியில் நாங்கள் 200 ரன்களை இலக்காகக் கொண்டிருந்ததால், அதனை அடைவதற்காக நான் அதிரடியாக விளையாடுவது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். நான் இருக்கும் வரை, ஒவ்வொரு பந்தையும் அதிகபட்சமாக பயன்படுத்த வேண்டும் என்ற எனது குறிக்கோள் தெளிவாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை