நான் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை என்றால்..; தோனி ஓபன் டாக்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாளை விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய கையுடனும், ஆர்சிபி அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி கையுடனும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளனர். இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு எம் எஸ் தோனி அளித்துள்ள ஒரு பேட்டியானது ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதில் பேசிய அவர், “நான் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை என்றால், மைதானத்தில் நான் பயனற்றவன் என்று நினைக்கிறேன், ஏனென்றால் அங்குதான் என்னால் இந்த ஆட்டத்தில் நீடிக்க முடிகிறது. மேலும் இது எனக்கு ஒரு சவால், அதுதான் அதை சுவாரஸ்யமாக்குகிறது. மேலும் கடந்த சில ஆண்டுகளான எனக்கு தோன்றும் வரை விளையாட எனது அணி சுதந்திரம் வழங்கியுள்ளது.
அதிலும் நான் நாற்காலியில் இருந்தாலும், கவலைப்பட வேண்டாம் நீங்கள் விளையாடுங்கள் என்று அவர்கள் சொல்வார்கள். நான் கிரிக்கெட்டை அனுபவிக்க விரும்புகிறேன், எனவே கடந்த ஒரு வருடமாக நான் கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடி வருகிறேன். கடந்த வருடம் ஐபிஎல் முடிந்த பிறகு, நான் உடனடியாக ருதுராஜ் கெய்க்வாட்டிடம், ‘அடுத்த சீசனில் 90% நீங்கள்தான் முன்னிலை வகிப்பீர்கள், எனவே மனதளவில் உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று சொன்னேன்.
மேலும் நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்பும் நான் அவரிடம், ‘நான் உங்களுக்கு அறிவுரை வழங்கினால், நீங்கள் அதைப் பின்பற்ற வேண்டும் என்று அர்த்தமல்ல. முடிந்தவரை விலகி இருக்க முயற்சிப்பேன்’ என்றும் கூறியுள்ளேன். ஏனெனில் கடந்த சீசன் முழுவதும், நான் பின்னணியில் முடிவுகளை எடுப்பதாக பலர் ஊகித்தனர். ஆனால் உண்மை என்னவென்றால், அவர் தான் 99 சதவீத முடிவுகளை எடுத்தார். நான் அவருக்கு உதவி செய்து கொண்டிருந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி, சிஎஸ்கே அணிக்காக ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். மேற்கொண்டு இதுவரை 265 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 24 அரைசதங்களுடன் 5243 ரன்களைக் குவித்துள்ளார். அதிலும் இது அவருடைய கடைசி ஐபிஎல் தொடராக இருக்கக்கூடும் என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.