ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணிக்கு மிட்செல் மார்ஷ் மற்றும் ஐடன் மார்க்ரம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஐடன் மார்க்ரம் ஒருபக்கம் நிதானமாக விளையாடி வந்த நிலையில், மறுமுனையில் மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். மேற்கொண்டு 27 பந்துகளில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.
இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் முதல் விக்கெட்டிற்கு 76 ரன்களை எட்டி இருந்த நிலையில், மிட்செல் மார்ஷ் 9 பவுண்டர்கள், 2 சிக்ஸர்கள் என 60 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய நிக்கோலஸ் பூரனும் 12 ரன்களை மட்டுமே சேர்த்த கையோடு நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய அணியின் கேப்டன் ரிஷப் பந்தும் 2 ரன்களில் நடையைக் கட்டினார். இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஐடன் மார்க்ரம் - ஆயூஷ் பதோனி இணை பொறுப்புடன் விளையாடியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்து அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.
இதில் அதிரடியாக விளையாடி வந்த ஆயூஷ் பதோனி 30 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதம் கடந்து விளையாடி வந்த ஐடன் மார்க்ரம் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 53 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் அப்துல் சமத் 4 ரன்களிலும், அதிரடியாக விளையாடி வந்த டேவிட் மில்லர் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்களைச் சேர்த்துள்ளது. மும்பை தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரியான் ரிக்கெல்டன் மற்றும் வில் ஜேக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இன்றைய ஆட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வில் ஜேக்ஸ் 5 ரன்களிலும், ரியான் ரிக்கெல்டன் 10 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய நமன் தீர் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். அவருடன் சூர்யகுமார் யாதவும் பவுண்டரிகளை அடிக்க அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
மேற்கொண்டு இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 70 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய நிலையில், அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நமன் திர் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 46 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். ஆனாலும் மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். அவருக்கு துணையாக திலக் வர்மாவும் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்த நிலையில் அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்த்தொடங்கியது. ஒரு கட்டத்தில் மும்பை அணி எளிதான வெற்றியைப் பதிவுசெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 67 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து 23 பந்துகளில் 25 ரன்களை எடுத்திருந்த திலக் வர்மாவும் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். இதனால் மும்பை அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் களத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் மிட்செல் சான்ட்னர் இருந்தனர். இதில் 20ஆவது ஓவரை ஆவேஷ் கான் வீசின நிலையில், ஓவரின் முதல் பந்தை ஹர்திக் பாண்டியா சிக்ஸர் விளாசி லக்னோ அணியின் மீதான அழுத்தத்தை அதிகரித்தார்.
Also Read: Funding To Save Test Cricket
ஆனால் அதன்பின் மும்பை இந்தியன்ஸ் அணியால் அந்த ஓவரில் 9 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. லக்னோ அணி தரப்பில் திக்வேஷ் சிங், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய இரண்டாவது வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியது.