ஐபிஎல் 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை 159 ரன்னில் சுருட்டியது கேப்பிட்டல்ஸ்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபற்ற 40ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஐடன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் சிறப்பான தொடக்கத்தைப் பெற்றதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர். இப்போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஐடன் மார்க்ரம் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார்.
அதன்பின் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதம் கடந்து விளையாடி வந்த ஐடன் மார்க்ரம் 2 பவுண்டரி 3 சிக்ஸர்கள் என 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்து தொடக்கத்தை பெற்ற நிலையில் 9 ரன்களுடன் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய அப்துல் சமத்தும் 2 ரன்னுடன் விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு நிதானமாக விளையாடி வந்த மிட்செல் மார்ஷும் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 45 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் இணைந்த டேவிட் மில்லர் மற்றும் ஆயூஷ் பதோனி மற்றும் டேவிட் மில்லர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த ஆயூஷ் பதோனி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய நிலையில் 6 பவுண்டரிகளுடன் 36 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ரிஷப் பந்தும் ரன்காள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். மேற்கொண்டு இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் மில்லர் 14 ரன்களைச் சேர்க்க, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி அணியில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Also Read: LIVE Cricket Score