ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையேயான போட்டி பாதியில் நிறுத்தம்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 58ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டது அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த இருவரும் தங்கள் அரைசதங்களை பூர்த்தி செய்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின்னர் 5 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 70 ரன்களைச் சேர்த்திருந்த கையோடு பிரியான்ஷ் ஆர்யா விக்கெட்டை இழந்தார்.
இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 10.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களைச் சேர்த்த நிலையில், மைதானத்தில் இருந்த ஃப்ளெட்லைட் என்றழைக்கப்படும் மின் விளக்குகள் செயலிழந்ததன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. மேற்கொண்டு தொழில்நுட்ப கோளாறு காரணமாக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியானது பாதியிலேயே நிறுத்தப்பட்டு கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: LIVE Cricket Score
அதேசமயம் மைதானத்தில் இருந்து வெளியான தகவலின் அடிப்படையில், இந்திய எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டதாகவும், அதனால் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மைதானத்தில் இருந்து அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பிசிசிஐ தரப்பில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மட்டுமே ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவித்துள்ளது.