ஐபிஎல் 2025: மிட்செல் மார்ஷ் அதிரடி சதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 236 டார்கெட்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 64ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.
அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மிட்செல் மார்ஷ் மற்றும் ஐடன் மார்க்ரம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் பறக்கவிட்டு மிரட்டினர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஐடன் மார்க்ரம் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 36 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து இன்னிங்ஸைத் தொடங்கியதுடன், பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினார். மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார்.
Also Read: LIVE Cricket Score
அதேசமயம் மறுபக்கம் நிக்கோலஸ் பூரனும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். பின்னர் 10 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 117 ரன்களைச் சேர்த்த் கையோடு மிட்செல் மார்ஷ் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிக்கோலஸ் பூரன் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 56 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 235 ரன்களைச் சேர்த்தது. குஜராத் அணி தரப்பில் சாய் கிஷோர் மற்றும் அர்ஷத் கான் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.