இன்னும் ஒரு ஆட்டம், ஒன்றாகக் கொண்டாடுவோம் - ரஜத் படிதார்!
முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஐபிஎல் தொடர் வரலாற்றில் 4ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதித்துள்ளது. அதேசமயம் இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவி இருந்தாலும், இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியில் ஆர்சிபி அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சுயாஷ் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ரஜத் படிதார், “எங்கள் திட்டங்கள், எப்படி பந்து வீச வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம் என்று நினைக்கிறேன். வேகப்பந்து வீச்சாளர்கள் மேற்பரப்பை நன்றாகப் பயன்படுத்தினார்கள் என்று நினைக்கிறேன். சுயாஷ் சிறப்பாக செயல்பட்ட விதம், அவர் தனது லைன்ஸ் அண்ட் லெந்த்களை வீசிய விதம், அது மிகவும் நன்றாக இருந்தது. ஒரு கேப்டனாக அவரது பந்துவீச்சைப் பற்றி நான் தெளிவாக இருக்கிறேன்.
அவர் ஸ்டம்ப்களை குறிவைக்க வேண்டும், அதுதான் அவரது பலம். அவரது பந்துவீச்சை பேட்டர்கள் புரிந்துகொள்வது கடினம். நான் எப்போதும் அவருக்கு தெளிவான யோசனைகளை வழங்க விரும்புகிறேன், அவரை குழப்ப விரும்பவில்லை. அதில் அவர் ஒரு சில ரன்களை விட்டுக்கொடுத்தாலும் எனக்குப் பரவாயில்லை. இந்த தொடர் முழுவதும் எங்களுக்கு நிறைய பயிற்சி அமர்வுகள் இருந்தன, எனவே ஒரு நாள் பயிற்சி செய்யாமல் இருப்பது உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாது.
பெரும்பாலான போட்டிகளில் பில் சால்ட் பேட்டிங் செய்யும் விதம், அவர் தொடக்கம் கொடுக்கும் விதத்தை பார்க்கும் போது, நான் அவருக்கு ஒரு பெரிய ரசிகனாக மாறிவிட்டேன். அதேபோல் பெங்களூருவில் மட்டுமில்லாமல் எங்கும் சென்றாலும் அங்கு ஆர்சிபி ரசிகர்கள் தங்கள் ஆதரவைத் தருகின்றனர். ஏனெனில் இதனை எங்கள் சொந்த மைதானம் என்று நாங்கள் உணர்கிறோம். எனவே தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும். இன்னும் ஒரு ஆட்டம், ஒன்றாகக் கொண்டாடுவோம்” என்று கூறிவுள்ளார்.
Also Read: LIVE Cricket Score
இப்போட்டி குறித்து பேசினால் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியானது எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 14.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன் பின் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணி 10 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.