ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கௌகாத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் நிதானமாக தொடங்கியதுடன் முதல் விக்கெட்டிற்கு 33 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரியான் பராக் ஓரளவு தாக்குப்பிடித்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். 

Advertisement

இதில் அதிரடியாக தொடங்கிய ரியான் பராக் 3 சிக்ஸர்களுடன் 25 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 29 ரன்களைச் சேர்த்த கையோடு தங்களின் விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வநிந்து ஹசரங்கா 4 ரன்களிலும், நிதீஷ் ரானா 8 ரன்களிலும், ஷுபம் தூபே 9 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த துருவ் ஜூரெல் மற்றும் ஷிம்ரான் ஹெட்மையர் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், ஓரளவு ரன்களையும் சேர்த்தனர். 

இறுதியில் 5 பவுண்டரிகளுடன் 33 ரன்களைச் சேர்த்த கையோடு துருவ் ஜூரெலும், 7 ரன்களுடன் ஷிம்ரான் ஹெட்மையரும் விக்கெட்டை இழக்க, இறுதியில் அதிரடியாக விளையாடி இரண்டு சிக்ஸர்களை விளாசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 16 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் வருண் சக்ரவர்த்தி, மொயீன் அலி, வைபவ் அரோரா, ஹர்ஷித் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நொக்கி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் மொயீன் அலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மொயீன் அலி 5 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் டி காக்குடன் இணைந்த அஜிங்கியா ரஹானே பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். அதேசமயம் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடிய குயின்டன் டி காக் நடப்பு ஐபிஎல் தொடரில் தன்னுடைய முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

பின்னர் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஜிங்கியா ரஹானே தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அங்கிரிஷ் ரகுவான்ஷியும் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குயின்டன் டி காக் 8 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 97 ரன்களையும், அங்கிரிஷ் ரகுவன்ஷி 22 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 17.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News