அஹ்மதாபாத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டி; பிசிசிஐ அறிவிப்பு!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெக்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவுள்ளன.
அதேசமயம் மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. முன்னதாக இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்டிருந்த இத்தொடரானது மீண்டும் கடந்த மே 17ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக எஞ்சிய லீக் போட்டிகள் அனைத்தும் பெங்களூரு, மும்பை, அஹ்மதாபாத், டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் லக்னோவில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மேற்கொண்டு பிளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டிக்கான மைதானங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக இத்தொடரின் இறுதிப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதன்பின் பாதுகாப்பு காரணங்களால் இத்தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றுவதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டிருந்தது.
அதன்படி தற்சமயம் இத்தொடரின் முதல் குவாலிஃபையர் மற்றும் எலிமினேட்டர் சுற்று ஆட்டங்கள் சண்டிகர் மாநிலைம் முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், இரண்டாவது குவாலிஃபையர் மற்றும் இறுதிப்போட்டியானது குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறும் என்று பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்மாக அறிவித்துள்ளது.
மேற்கொண்டு இத்தொடரில் பெங்களூரூவில் நடைபெற இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியும், மோசமான வாநிலை காரணமாக லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்திற்கு மாற்றியமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெங்களூருவில் கனமழை பெய்துவருவதன் காரணமாக இந்த போட்டியானது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
Also Read: LIVE Cricket Score
முன்னதாக இந்த மைதானத்தில் நடைபெற இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மழை காரணமாக டாஸ் வீசப்படாமலேயே முழுமையாக கைவிடப்பட்டிருந்தது. மேற்கொண்டு பிளேஆஃப் சுற்று போலவே, லீக் சுற்றின் மீதமுள்ள போட்டிகளுக்கும் கூடுதலாக ஒரு மணிநேரம் ஒதுக்கப்படும் என்றும் பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.