ஐபிஎல் 2025: மழையால் கைவிடப்பட்ட போட்டி; பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது கேகேஆர்!

Updated: Sat, May 17 2025 22:42 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், 7 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்திருந்தது. 

இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடரவுள்ளது. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தன. மேலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறே இந்த வெற்றியானது அவசியம் தேவை என்ற நிலை இருந்தது. 

மேற்கொண்டு நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் ஆர்சிபி அணி வெற்றிபெற்று அசத்திய நிலையில், அதற்கான பதிலடியை கேகேஆர் அணி இப்போட்டியில் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதன்படி இந்த போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்க இருந்த நிலையில் மழை காரணமாக டாஸ் நிகழ்வானது தாமதமானது. பின்னர் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டியானது நடைபெறுமா என்ற கேள்விகளும் அதிகரித்திருந்தது. 

இந்நிலையில் தொடர் மழை காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி டாஸ் வீசப்படாமலேயே கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளியும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நடப்பு சாம்பியனான கேகேஆர் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் அதிகாரப்பூர்வமாக இழந்துள்ளது. 

Also Read: LIVE Cricket Score

அதேசமயம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் 17 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன் முதலிடத்திற்கும் முன்னேறி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் சமீபத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த விராட் கோலியின் ஆட்டத்தைக் காண காத்திருந்த கிரிக்கெட் ரசிகர்கள், போட்டி கைவிடப்பட்டதால் சோகத்தில் ஆழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை