ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாளை விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது.  இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்காளூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு பில் சால்ட் மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் விராட் கோலி ஒருமுனையில் நிதானமாக விளையாடிய நிலையில், மறுபக்கம் பில் சால்ட் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அதிரடி காட்டியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார்.

Advertisement

இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 45 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தானர். அதன்பின் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 32 ரன்களில் பில் சால்ட் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய தேவ்தத் படிக்கல் தனது பங்கிற்கு 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 27 ரன்களை எடுத்த கையோடு நடையைக் கட்டினார். அதன்பின் விராட் கோலியுடன் இணைந்த ரஜத் படிதாரும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் விராட் கோலி 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 31 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த லிவிங்ஸ்டோனும் 10 ரன்களுடன் ஆட்டமிழந்தார். 

மேற்கொண்டு அதிரடியாக விளையாடும் முயற்சியில் ஜித்தேஷ் சர்மாவும் 12 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் பொறுப்புடன் விளையாடி வந்த ராஜத் படிதர் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். பின்னர் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 51 ரன்கள் எடுத்த நிலையில் ரஜத் படிதாரும், அடுத்து களமிறங்கிய குர்னால் பாண்டியா ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து மதிஷா பதிரானா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். இறுதியில் டிம் டேவிட் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு 22 ரன்களைச் சேர்த்தார். 

இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களைச் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், மதீஷா பதிரானா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராகுல் திரிபாதி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ராகுல் திரிபாதி 5 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ரன்கள் ஏதுமின்றியும், தீபக் ஹூடா 4 ரன்னிலும், சாம் கரண் 8 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் சிஎஸ்கே அணி 54 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் ஷிவம் தூபே இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா 5 பவுண்டரிகளுடன் 41 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து ஷிவம் தூபேவும் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 19 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரவிச்சந்திரன் அஸ்வின் 11 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் இணைந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் மகேந்திர சிங் தோனி இருவரும் ஒரு சில பவுண்டரிகளை அடித்து ரன் சேர்க்க முயற்சித்தனர். இதில் ரவீந்திர ஜடேஜா 25 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தோனி 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 30 ரன்களைச் சேர்த்தார். இருப்பினும் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஷ் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளையும், யஷ் தயாள் மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News