மீண்டும் என்சிஏவுக்கு சென்ற சஞ்சு சாம்சன் - காரணம் என்ன?
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கௌகாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இப்போட்டி முடிந்த கையோடு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றுள்ளார். முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் போது காயத்தை சந்தித்த அவர், அதற்காக அறுவை சிகிச்சையையும் மேற்கொண்டிருந்தார். இதனால் அவர் தனது காயத்தில் இருந்து மீண்டு வரும் முயற்சியில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இணைந்து பணியாற்றி வந்தார்.
இதனால் ஐபிஎல் தொடரின் முதல் சில ஆட்டங்களை அவர் தவறவிடுவார் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அவர் தனது பேட்டிங் உடற்தகுதிய நிரூபித்த காரணத்தால் இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இம்பேக்ட் பிளேயாராக மட்டுமே விளையாடுவேன் என்று கூறியிருந்தார். இதனால் இந்த மூன்று போட்டிகளுக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தான் தனது விக்கெட் கீப்பிங் தகுதியை நிரூபிக்க வேண்டி சஞ்சு சாம்சன் தற்போது என்சிஏவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இந்த பரிசோதனையில் சஞ்சு சாம்சன் தேர்ச்சியடையும் பட்சத்தில், அவரும் ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவதுடன் அணியின் விக்கெட் கீப்பராகவும் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பரிசோதனை முடிவு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
நடப்பு ஐபிஎல் தொடரை அரைசதத்துடன் தொடங்கிய சஞ்சு சாம்சன் இதுவரை மூன்று போட்டிகளிலும் சேர்த்து 99 ரன்களை எடுத்துள்ளார். இதனால் இனி வரும் போட்டிகளில் அவர் தனது முழு ஃபார்முக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்திய்ல் அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் அணிஏப்ரல் 5ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி சண்டிகரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரான் ஹெட்மையர், சந்தீப் சர்மா, ஜோஃப்ரா ஆர்ச்சர், வநிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேய சிங், நிதிஷ் ராணா, துஷார் தேஷ்பாண்டே, சுபம் துபே, யுத்வீர் சரக், ஃபசல்ஹக் ஃபரூக்கி, வைபவ் சூர்யவன்ஷி, குவேனா மபாகா, குணால் ரத்தோர், அசோக் சர்மா.