ஐபிஎல் 2025: மழையால் கைவிடப்பட்டது கேகேஆர் - பஞ்சாப் கிங்ஸ் போட்டி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 44ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் கிளென் மேக்ஸ்வெல், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் லெவனில் இடம்பிடித்த நிலையில், கேகேஆர் அணி தரப்பில் அறிமுக வீரர்கள் சேத்தன் சக்காரியா, ரோவ்மன் பாவெல் ஆகியோரும் லெவனில் இடம்பிடித்தனர். இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரப்ஷிம்ரன் சிங் மற்றும் பிரியான்ஷ் ஆர்யா இணை தொடக்கம் கொடுத்தனர்.
ஆரம்பம் முதலே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்தினர். இதில் பிரியான்ஷ் ஆர்யா தனது அரைசதத்தையும் பூர்த்தி செய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அதிரடியாக விளையாடி வந்த பிரியான்ஷ் ஆர்யா 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 69 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிரப்ஷிம்ரன் சிங் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 83 ரன்களை எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
அவர்களைத் தொடர்ந்து கிளென் மேக்ஸ்வெல்லும் 7 ரன்னிலும், மார்கோ ஜான்சென் 3 ரன்னிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்களையும், ஜோஷ் இங்கிலிஸ் 11 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களைச் சேர்த்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் வைபவ் அரோரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், வருண் சக்ரவர்த்தி மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
Also Read: LIVE Cricket Score
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய கேகேஆர் அணி முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்களை எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. அதன்பின் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் ஆட்டம் தாமதமானது. இதனால் இப்போட்டி 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர் மழை காரணமாக கேகேஆர் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.