எங்களுக்கு நல்ல தொடக்கங்கள் கிடைக்கவில்லை - ருதுராஜ் கெய்க்வாட்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கௌகாத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ராயல்ஸ் அணியில் நிதீஷ் ரானா அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் அரைசதம் கடந்ததுடன், 10 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 81 ரன்களிலும், கேப்டன் ரியான் பராக் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 37 ரன்களிலும் ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை சேர்த்தது. சிஎஸ்கே தரப்பில் கலீல் அகமது, நூர் அகமது மற்றும் மதீஷா பதிரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 63 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய ருதுராஜ் கெய்க்வாட், “பவர்பிளேயில் நிதிஷ் நன்றாக பேட்டிங் செய்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது, அவர் பின்தங்கிய நிலையில் இருப்பதை அறிந்து நாங்கள் முன்னோக்கிச் செல்லவில்லை, அவரை விக்கெட்டுக்கு முன்னால் விளையாட வைத்திருக்க வேண்டும். மேலும் நாங்கள் ஃபில்டிங்கும் ரன்களை தடுக்க தவறவிட்டோம். இந்த மைதானத்தில் 180 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்கு தான்.
Also Read: Funding To Save Test Cricket
முதலில் அவர்கள் 220 ரன்களுக்கு மேல் அடிப்பார்கள் என்ற சமயத்தில், நாங்கள் சிறப்பாக செயல்பட்டு 180 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினோம். துரதிர்ஷ்டவசமாக, எங்களுக்கு நல்ல தொடக்கங்கள் கிடைக்கவில்லை, ஆனால் அது கிடைத்தவுடன் விஷயங்கள் வித்தியாசமாக இருக்கும். மேலும் எங்களுக்குள் சரி செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவற்றை சரிசெய்யும் பட்சத்தில் நாங்கள் ஒரு நல்ல அணியாக இருப்போம் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.