நிச்சயம் நாங்கள் மீண்டெழுவோம் - சிஎஸ்கே குறித்து காசி விஸ்வநாதன்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
ஆனால் இத்தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடுகள் ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது அடுத்தடுத்து தொடர்ச்சியாக 5 தோல்விகளைச் சந்தித்தது. மேற்கொண்டு இத்தொடரில் இதுவரை சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் 6 தோல்விகளைச் சந்தித்துள்ளது.
இதன் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன், இணிவரும் அனைத்து போட்டிகளிலும் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு குறித்து நினைக்க முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அணி தேர்வு, அணியை வழிநடத்திய வீதம், பயிற்சியாளர்கள், வீரர்கள் என அனைவரது மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டெழும் என அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. இதுகுறித்து பேசிய அவர், “இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்திறனைப் பார்த்து நீங்கள் அனைவரும் கொஞ்சம் ஏமாற்றமடைவீர்கள். நிச்சயமாக, அது நடக்கத்தான் செய்யும். இதற்கு முன்பும் இது நடந்தது. நாங்கள் தற்போது நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை என்பது எங்களுக்குத் தெரியும்.
ஆனால் வரும் போட்டிகளில், நாங்கள் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று நம்புகிறோம். ஷிவம் துபே போன்ற திறமையான ஒருவர் இங்கே இருக்கிறார். அவர் பல ஆண்டுகளாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தோனி போன்ற ஒருவர் தலைமையில் இருப்பதால், நாங்கள் திரும்பி வருவது காலத்தின் கேள்வி மட்டுமே. ஏனெனில் கடந்த 2010 ஆம் ஆண்டு எங்களுக்கு நினைவிருக்கிறது. நாங்கள் தொடர்ச்சியாக ஐந்து ஆட்டங்களில் தோல்வியடைந்த நிலையிலும் கோப்பையை வென்றோம்.
Also Read: LIVE Cricket Score
அது தான் ஐபிஎல் தொடரில் நாங்கள் வென்ற முதல் சாம்பியன் பட்டமும் கூட. வீரர்கள் அர்ப்பணிப்புடன் கடும் பயிற்சி மேற்கொன்டு வருகிறார்கள். அணியும் அர்ப்பணிப்புடன் இருக்கிறது. வரவிருக்கும் போட்டிகளில் நாங்கள் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துவோம் என்று நான் நம்புகிறேன்”என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.