ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் எப்போது? - அருண் தூமல் பதில்!

Updated: Sun, Mar 10 2024 13:21 IST
ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் எப்போது? - அருண் தூமல் பதில்! (Image Source: Google)

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் முறையே தலா 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளன. இதையடுத்து ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. 

மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் ஓவ்வொரு மூன்றாண்டுக்கும் ஒரு முறை ஐபிஎல் அணிகள் முழுவதுமாக கலைக்கப்பட்ட வீரர்கள் மெகா ஏலத்தை ஐபிஎல் நிர்வாகம் நடத்தி வருகிறது. அதன்படி ஒவ்வோரு அணிகளும் மூன்று அல்லது நான்கு வீரர்களை தக்கவைத்துக்கொண்டு மீதமிருக்கும் வீரர்களை ஏலாத்திற்கு அனுப்ப வேண்டும். அதன்பின் ஏலத்தில் வாங்கும் வீரர்களின் அடிப்படையில் புதிய அணியை உருவாக்க வேண்டும் என்பது நிபந்தனை.

இதன்மூலம் ஒரே அணி தொடர்ச்சியாக வீரர்களை தக்கவைப்பதை தவிர்ப்பதுடன், மற்ற அணிகளும் சிறந்த வீரர்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். அந்த வரிசையில் சமீபத்தில் கூட ஐபிஎல் மினி ஏலம் நடத்தப்பட்டு, அதில் பல முன்னணி வீரர்களையும், சில புதுமுக வீரர்களையும் ஐபிஎல் அணிகள் வாங்கியுள்ளன. அந்த வகையில் ஐபிஎல் தொடரில் அடுத்த வீரர்கள் மெகா ஏலம் எப்போது நடைபெறும் என்ற கேள்விக்கு ஐபிஎல் நிர்வாக தலைவர் அருண் தூமல் பதிலளித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ஐபிஎல் தலைவர் அருண் தூமல், “நிச்சயமாக நாங்கள் அடுத்த வருடம் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தை நடத்துவோம். ஒவ்வொரு அணியும் மூன்று முதல் நான்கு வீரர்களை தக்க வைக்கலாம். இதன் மூலமாக புதிய அணிகள் உருவாக்கப்படும். இது ஐபிஎல் தொடரை மேலும் சுவாரசியமாக மாற்றும் என நம்புகிறோம். மெகா ஏலம் முன்பு இருந்ததைப் போலவே பெரியதாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்று நம்புகிறோம்.  

இதனால் எல்லா கிரிக்கெட் நாடுகளும் பலனடைந்து இருக்கின்றன. இந்த முறை சவால் என்னவென்றால், ஜூன் முதல் வாரத்தில் டி20 உலகக் கோப்பை நடக்கிறது. எனவே நாங்கள் ஐபிஎல் தொடரை மே 25 அல்லது 26ஆம் தேதிக்குள் முடித்தாக வேண்டும். அப்பொழுதுதான் இந்திய அணி அமெரிக்கா போன்ற ஒரு புதிய சூழ்நிலையில் சென்று தங்கி பழகி விளையாடுவதற்கு வசதியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

இது தவிர, இஷான் கிஷன் ரஞ்சி கோப்பை முழுவதும் விளையாடாதது குறித்தும், ஸ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிகாக காலிறுதி போட்டியில் வெளியேறியது குறித்தும் அருண் தூமல் தனது கருத்தை தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், “ஐபிஎல் என்பது பிசிசிஐயின் ஒருங்கிணைந்த பகுதிதான். இந்திய கிரிக்கெட்டில் பிசிசிஐதான் உச்சம். ஒவ்வொரு வீரருக்கும் நாட்டிற்காக விளையாடுவதே முதன்மையானதாக இருக்க வேண்டும், இதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், உரிமையாளரின் ஒரு பகுதியாக இருந்து நீங்கள் எவ்வளவு கவர்ச்சியாக மாறினாலும், நீங்கள் நாட்டுக்காக விளையாடும்போதுதான் உங்களுக்கு உண்மையான மரியாதை கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை