ஐபிஎல் 2023: முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ அறிவுறுத்தல்!
கடந்தாண்டு நடந்த ஆசிய கோப்பை தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடரில் தோல்வியடைந்த பிறகு இந்திய அணியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துக்கொண்டிருக்கிறது பிசிசிஐ. அதன்படி தற்போது ஹர்திக் பாண்டியா தலைமையில் டி20க்கு என தனி அணியும், ரோஹித் சர்மா தலைமையில் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு என தனி அணியும் செயல்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, ஐபிஎல் தொடரிலும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது பிசிசிஐ. அதாவது வரும் அக்டோபர் மாதம் இந்திய மண்ணில் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இதற்கு தயாராக வேண்டும் என்றால் வீரர்களின் பணிச்சுமையை குறைப்பது மிகவும் முக்கியமாகும். அதற்காக தான் ஐபிஎல் தொடரில் வீரர்கள் பங்கேற்பதில் கட்டுப்பாடுகள் போடப்பட்டன.
அதாவது உலகக்கோப்பை திட்டத்திற்காக 20 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த 20 வீரர்களையும் ஐபிஎல்-ல் தொடர்ச்சியாக ஆட வைக்கக்கூடாது. குறிப்பிட்ட அளவிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும், என பிசிசிஐ கோரியது. ஆனால் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ-யால் உத்தரவிட முடியாது, அவர்கள் 2 மாதங்களுக்கு நாங்கள் ஒப்பந்தம் செய்த வீரர்கள் என ஐபிஎல் அணிகள் தடலாடியாக கூறிவிட்டன.
இந்நிலையில் இதுகுறித்து இறுதி முடிவெடுக்க ஐபிஎல் அணிகளுடன் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது பிசிசிஐ. அதில், ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு வாரியங்கள், தங்களது வீரர்கள் இத்தனை ஓவர்கள் தான் பந்துவீச வேண்டும் என்ற நிபந்தனையுடன் தடையில்லா சான்றிதழை(NOC) கொடுத்துள்ளன. எனவே இந்தியாவும் ஒரு 20 வீரர்களுக்கு அப்படி செய்யவுள்ளது. இதற்காக ஒத்துழைப்பு தர வேண்டும் என விவாதிக்கவுள்ளனர்.
பிசிசிஐ சேர்ந்த பிசியோதெரபிஸ்ட்கள், ஐபிஎல் அணிகளிலுடன் பயணிப்பார்கள். அந்த 20 வீரர்களின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள். சிறிது காயபாதிப்பு என்று தெரிந்தாலும் கூட, அவர்களுக்கு ஓய்வு தரக்கோரி அவர்கள் எச்சரிக்கை கொடுப்பார்கள் எனத்தெரிகிறது. இதனை ஐபிஎல் அணிகள் எப்படி ஏற்றுக்கொள்ளப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் முதல் காரணமாக இருந்தவர்கள், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சஹார் போன்ற முன்னணி வீரர்கள் தான். இவர்கள் மூவருமே டி20 உலகக்கோப்பையை தவறவிட்டனர். ஜடேஜா ஆஸ்திரேலியா தொடருக்கு வந்துவிடுவார் எனக்கூறப்படும் சூழலில், மற்ற இருவரின் நிலை இதுவரை தெரியாமலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.