ஐபிஎல் 2022: ‘என்னால் நம்பமுடியவில்லை’ - கம்மின்ஸ் குறித்து ஸ்ரேயாஸ்!
15ஆவது ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
புனேவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 61 ரன்களும், திலக் வர்மா 38* ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு, அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ரஹானே (7), ஸ்ரேயஸ் ஐயர் (10), சாம் பில்லிங்ஸ் (17), ராணா (8) மற்றும் ரசல் (11) ஆகியோர், வெங்கடேஷ் ஐயரை தனியாக போராடவிட்டு விட்டு, வந்த வேகத்தில் விகெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.
பந்துவீச்சிற்கு சாதகம் என கருதப்பட்டதால் மும்பை அணியின் கையே இந்த போட்டியில் ஓங்கியிருந்த நிலையில், போட்டியின் 15வது ஓவரில் களத்திற்கு வந்த பாட் கம்மின்ஸ் வந்த வேகத்தில் மும்பை இந்தியன்ஸின் பந்துவீச்சை துவம்சம் செய்து வெறும் 14 பந்துகளில் அரைசதம் அடித்ததுடன், 15 பந்துகளில் 56 ரன்களும் குவித்ததன் மூலம் சாத்தியமில்லாத இலக்கை 16வது ஓவரிலேயே எட்டிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.
இந்தநிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டனான ஸ்ரேயஸ் ஐயர், பாட் கம்மின்ஸின் அதிரடி ஆட்டத்தை தன்னாலையே நம்ப முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஸ்ரேயஸ் ஐயர், “பாட் கம்மின்ஸ் விளையாடிய விதத்தை என்னால் நம்பவே முடியவில்லை என்பது தான் உண்மை. வலைபயிற்சியில் கூட கம்மின்ஸ் விரைவாக விக்கெட்டை தான் இழந்தார். அவரிடம் இருந்து இதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். டைம் அவுட்டின் போது வெங்கடேஷ் ஐயரிடம் பொறுமையாக விளையாட அறிவிறுத்தினோம், அதே போல் பாட் கம்மின்ஸை முடிந்தவரை அதிரடியாக விளையாட சொன்னோம், ஆனால் அவர் ஒரே ஓவரில் போட்டியை முடித்துவிட்டார்” என்று தெரிவித்தார்.