ஐபிஎல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்புடன் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 2ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணிக்கு சுரேஷ் ரெய்னா, மொயீன் அலி, சாம் கரன் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை குவித்தது. சிஎஸ்கே அணி தரப்பில் அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 54 ரன்களையும், சாம் கரன் 40 ரன்களையும், மொயீன் அலி 36 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஷிகர் தவான், பிரித்வி ஷா இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். மேலும் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினார்.
பின்னர் 72 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரித்வி ஷா ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 85 ரன்களில் ஷிகர் தவானும் வெளியேறினார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ரிஷப் பந்த் - மார்கஸ் ஸ்டோய்னிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.
இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.2 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி சீசனை வெற்றியுடன் தொடங்கியது.