இராணி கோப்பை 2022: சர்ஃப்ராஸ், முகேஷ் குமார் அபாரம்; வலிமையான நிலையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா!

Updated: Sat, Oct 01 2022 17:16 IST
Image Source: Google

பிசிசிஐயின் பாரம்பரியமிக்க தொடர்களில் ஒன்று இராணி கோப்பை ஆகும். ரஞ்சி கோப்பையில் சாம்பியன் பட்டம் வாங்கும் அணியும், உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களை வைத்து இதர இந்திய அணிகளும் இடம்பெறுவார்கள். இந்த நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் இராணி கோப்பை தொடர் நடைபெறவில்லை

கடந்த 2020ஆம் ஆண்டு சௌராஷ்டிரா அணி சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து, அந்த ஆண்டு நடைபெறவிருந்த இராணி கோப்பை தற்போது நடைபெறுகிறது. இதே போன்று 2021 -2022 ஆம் ஆண்டில் ரஞ்சி கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற மத்திய பிரதேச அணி பங்கேற்கும் இராணி கோப்பை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சௌராஷ்டிரா அணி வீரர்கள், ரெஸ்ட் ஆஃப் இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

அதிலும் ஹர்விக் தேசாய், சிராக் ஆகியோர் டக் அவுட் ஆகினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 1 ரன், ஷேல்டன் ஜாக்சன் 2 ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்குஅதிர்ச்சி அளித்தனர். இதனால் 52 ரன்கள் சேர்ப்பதற்குள் சௌராஷ்டிரா அணி 7 விக்கெட்களை இழந்தது. தர்மேந்திர சிங் ஜடேஜா அதிகபட்சமாக 28 ரன்கள் எடுக்க, சௌராஷ்டிரா அணி 98 ரன்களில் சுருண்டது. 

இதில் ரெஸ்ட் ஆஃப் இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதே போன்று குல்தீப் சென், உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ரெஸ்ட் ஆஃப் இந்திய அணியில் அபிமன்யூ ஈஸ்வரன் ரன் ஏதுமின்றியும், மயாங்க் அகர்வால் 11 ரன்களிலும், யாஷ் தள் 5 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

பின்னர் ஜோடி சேர்ந்த ஹனுமா விஹாரி - சர்ப்ராஸ் கான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தடுத்து, அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் சர்ப்ராஸ் கான் சதமடித்து மிரளவைக்க, ஹனுமா விஹாரியும் அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

இதன்மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்களைச் சேர்த்தது. இதில் சர்ஃப்ராஸ் கான் 125 ரன்களுடனும், ஹனுமா விஹாரி 62 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இதையடுத்து 107 ரன்கள் முன்னிலையுடன் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை