அயர்லாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று பெல்ஃபெஸ்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்து ஆஃப்கானிஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தானுக்கு ஹஸ்ரதுல்லா ஸஸாய் - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸஸாய் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரஹ்மனுல்லா குர்பாஸ் அரைசதம் கடந்த கையோடு 53 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய இப்ராஹிம் ஸத்ரான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
பின் அவரும் அரைசதத்தைப் பதிவுசெய்யாமல் 36 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார். இறுதில் நஜிபுல்லா ஸத்ரான் ஓரளவு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நஜிபுல்லா ஸத்ரான் 18 பந்துகளில் 42 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய அயர்லாந்து அணியில் பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி, லோர்கன் டக்கர், கர்டிஸ் கேம்பர் என நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் களமிறங்கிய கரேத் டெலானி 16 ரன்களோடு பெவிலியன் திரும்ப மறுமுனையில் அதிரடியாக விளையாடிய லோர்கன் டக்கர் 31 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஜார்ட் டக்ரெல் - ஃபின் ஹேண்ட் இணை இறுதிவரை போராடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமாக செயல்பட்ட ஜார்ட் டக்ரேல் அரைசதம் கடந்து அசத்தினார்.
இறுதில் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஃபின் ஹேண்ட் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் அயர்லாந்து அணிக்கு வெற்றிபெற 28 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அயர்லாந்து அணியால் அந்த ஓவரில் 5 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜார் டக்ரேல் 58 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்து வருகிறது.