IRE vs IND, 1st T20I: ஹாரி டெக்டர் அரைசதத்தால் தப்பிய அயர்லாந்து; இந்தியாவுக்கு 109 டார்கெட்!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி டப்ளினில் இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச தீர்மானித்தார். ஆட்டம் தொடங்கும் முன்னரே மழை பெய்த காரணத்தால் ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டு, 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
அதன்படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணியில் கேப்டன் ஆண்டி பால்பிர்னி முதல் பந்திலேயே புவனேஷ்வர் குமாரிடம் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாட முயன்ற பால் ஸ்டிர்லிங்கும் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியாவிடம் விக்கெட்டை இழந்தார்.
அவர்களைத் தொடர்ந்து வந்த கரெத் டெலானி 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஹேரி டெக்டர் - லோர்கன் டக்கர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
அதன்பின் 18 ரன்கள் எடுத்திருந்த டக்கரும் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனாலும் மறுமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹாரி டெக்டர் 29 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
இதன்மூலம் 12 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஹாரி டெக்டர் 64 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, யுஸ்வேந்திர சஹால், ஆவேஷ் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.