IRE vs IND, 2nd T20I: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!

Updated: Wed, Jun 29 2022 00:46 IST
IRE vs IND, 2nd T20I: India win by 4 runs against Ireland (Image Source: Google)

இந்தியா - அயர்லாந்து இடையேயான 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சனும் இஷான் கிஷனும் களமிறங்கினர். இஷான் கிஷன் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சஞ்சு சாம்சனுடன் தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தார். ஹூடா மற்றும் சாம்சன் ஆகிய இருவருமே அதிரடியாக பேட்டிங் ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினர்.

அதிரடியாக ஆடிய ஹூடா 55 பந்தில் சதமடித்தார். சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்தார். 2ஆவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 193 ரன்களை குவித்தனர். தென்னாப்பிரிக்க டி20 தொடரில் ஆட வாய்ப்பு கிடைக்காமல் தனக்கான வாய்ப்புக்காக காத்திருந்த ஹூடா, அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். 57 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 104 ரன்களை குவித்தார். 

சஞ்சு சாம்சன் 42 பந்தில் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். இவர்கள் விக்கெட்டுக்கு பிறகு மற்ற வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர். ஆனாலும் ஹூடா மற்றும் சாம்சனின் அதிரடியால் 20 ஓவரில் 225 ரன்களை குவித்து, 226 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை நிர்ணயித்தது இந்திய அணி.

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் - கேப்டன் ஆண்டி பால்பிர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இந்திய அணி சார்பில் முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். 

அந்த ஓவரில் அயர்லாந்து வீரர் பவுல் ஸ்டிர்லிங் ஒரு சிக்ஸர் மூன்று பவுண்டரி விளாசினார். மொத்தம் அந்த ஓவரில் 18 ரன்கள் விளாசப்பட்டது. ஹர்ஷல் வீசிய இரண்டாவது ஓவரிலும் ஒரு சிக்ஸர் பறந்தது. அதேபோல், மூன்றாவது மற்றும் நான்காவது ஓவரிலும் தலா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசப்பட்டது. 5ஆவது ஓவரில் இரண்டு சிக்ஸ்ர்கள் பறந்தது. இதனால் 5 ஓவர்கள் முடிவில் 65 ரன்கள் எடுத்தது அயர்லாந்து.

தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பால் ஸ்டிர்லிங் 18 பந்துகளில் 40 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த கரெத் டெலானி ரன் ஏதுமின்றி ரன்வுட்டாகி வெளியேறினார். 

ஆனாலும் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஆண்டி பால்பிர்னி அரைசதம் கடந்தர். பின்னர் 37 பந்துகளில் 60 ரன்களைச் சேர்த்திருந்த பால்பிர்னி, ஹர்ஷல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தர். இதில் 7 சிக்சர்கள், 2 பவுண்டரிகளும் அடங்கும். அவரைத் தொடர்ந்து லோர்கன் டக்கர் 5 ரன்களில் உம்ரான் மாலிக்கிடம் வீழ்ந்தார்.

அதன்பின் ஹேரி டெக்டர் - ஜார்ஜ் டக்ரெல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்காக போராடினர். பின்னர் 37 ரன்கள் எடுத்திருந்த ஹேரி டெக்டர், புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் தீபக் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

இதனால் கடைசி ஓவரில் அயர்லாந்து அணி வெற்றிக்கு 17 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இந்திய அணி தரப்பில் கடைசி ஓவரை வீசிய உம்ரான் மாலிக் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை கொடுத்து ஆட்டத்தில் பரபரப்பை கூட்டினார்.

இதன் காரணமாக கடைசி பந்தில் அயர்லாந்து வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அயர்லாந்து பேட்டர்களால் அதனை அடிக்க முடியவில்லை.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தமூலம் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியதோடு, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை