IRE vs NZ, 1st T20I: கிளென் பிலீப்ஸ் அரைசதம்; அயர்லாந்துக்கு 174 டார்கெட்!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று பெல்ஃபெஸ்டில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசதீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஃபின் ஆலன் ஒரு ரன்னிலும், டெனே கிளெவர் 5 ரன்களிலும் ஜோஷுவா லிட்டில் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
மறுமுனையில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மார்ட்டின் கப்தில் 12 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த டேரில் மிட்செலும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த கிளென் பிலீப்ஸ் - ஜிம்மி நீஷம் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்பட்டுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின் 29 ரன்களில் நீஷம் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மிட்செல் பிரேஸ்வெல்லும் 21 ரன்களுடன் பெவிலியனுக்கு திரும்பினார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த கிளென் பிலீப்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்தது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளென் பிலீப்ஸ் 69 ரன்களுடன் களத்தில் இருந்தார். அயர்லாந்து அணி தரப்பில் ஜோஷுவா லிட்டில் 4 விக்கெட்டுகளையும், மார்க் அதிர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.