IRE vs SA: மில்லர், ஷம்ஸி அபாரம்; தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி பெல்ஃபெஸ்டில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் டேவிட் மில்லர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி திணறிவந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு நம்பிக்கை யளித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த டேவிட் மில்லர் 75 ரன்களைச் சேர்த்தார். அயர்லாந்து அணி தரப்பில் மார்க் அதிர், பால் ஸ்டிர்லிங் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணியில் கெவின் ஓ பிரையன், ஆண்டி பால்பிர்னி ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.
மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த பால் ஸ்டிர்லிக்கும் விக்கெட்டை இழக்க அயர்லாந்து அணியின் தோல்வி உறுதியனாது. இறுதியில் அந்த அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்னில் இன்னிங்ஸை முடித்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஃபோர்டுயின், தப்ரைஸ் ஷம்ஸி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி, டி20 தொடரை 2-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மில்லர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.