தனி ஒருவனாய் அயர்லாந்தை துவம்சன் செய்த ஷம்ஸி; தென் ஆப்பிரிக்கா அசத்தல் வெற்றி!
அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று டப்லினில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இருப்பினும் ஐடன் மார்க்ரம் மட்டும் நிலைத்து விளையாடி 39 ரன்களைச் சேர்த்தார்.
இதனால் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை எடுத்தது. அயர்லாந்து அணி தரப்பில் மார்க் அதிர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணியில் பால் ஸ்டிர்லிங் 6 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து கெவின் ஓ பிரையனும் ரபாடாவின் முதல் பந்திலேயே நடையைக் கட்டினார்.
அதன்பின் வந்த கேப்டன் பால்பிர்னி 22 ரன்களிலும், ஹேரி டெக்டர் 36 ரன்களில் ஆட்டமிழக்க, அயர்லாந்து அணியின் தோல்வி உறுதியானது. அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து அணி வீரர்கள் தப்ரைஸ் ஷம்ஸி சுழலில் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.
இருப்பினும் இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பேரி மெக்கர்த்தி அணி ஆல் அவுட்டாவது தடுத்தார். இதனால் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை மட்டுமே எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் தப்ரைஸ் ஷம்ஸி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய தப்ரைஸ் ஷம்ஸி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.