IRE vs ZIM: அயர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றிபெற்ற ஜிம்பாப்வே!
அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று டப்லினில் நடைபெற்றது. ஏற்கெனவே அயர்லாந்து அணி 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றிய நிலையில், இப்போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி கேப்டன் கிரேக் எர்வினின் அபாரமான ஆட்டத்தால், 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களைச் சேர்த்தது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எர்வின் 67 ரன்களைச் சேர்த்தார். அயர்லாந்து அணி தரப்பில் மார்க் அதிர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் எளிய இலக்கை துரத்திய அயர்லாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி வீரர்கள் பால் ஸ்டிர்லிங் 19, கெவின் ஓ பிரையன் 1, பால்பிர்னி 4, டெக்டர் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் வந்த வீரர்களும் சரிவர சோபிக்காததால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களை மட்டுமே எடுத்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் லுக் ஜோங்வா, டிரிபானோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கு உதவினர்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது.