WI vs IRE, 3rd ODI: மெக்பிரையன் அசத்தல்; வரலாற்று வெற்றியைப் பெற்றது அயர்லாந்து!
வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று ஜமைக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசியது.
இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜஸ்டின் க்ரீவ்ஸ், நிக்கோலஸ் பூரன், ஷமாரா ப்ரூக்ஸ், ரோஸ்டன் சேஸ், பொல்லார்ட் என அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
இருப்பினும் ஷாய் ஹோப் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். அவருக்கு துணையாக ஜேசன் ஹோல்டர் 44 ரன்களை சேர்த்தார்.
இதன்மூலம் 44.4 ஓவர்களிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களை மட்டுமே சேர்த்தது. அயர்லாந்து அணி தரப்பில் ஆண்டி மெக்பிரையன் 4 விக்கெட்டுகளையும், கிரேக் யங் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திய அயர்லாந்து அணியில் வில்லியம் போட்டர்ஃபீல்ட் முதல் பந்திலேயே டக் அவுட்டாக, அடுத்து ஜோடி சேர்ந்த பால் ஸ்டிர்லிங் - ஆண்டி மெக்பிரைன் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
பின் ஸ்டிர்லிங் 44 விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் மெக்பிரையன் அரைசதம் கடந்த கையோடு வெளியேறினார். அடுத்து வந்த ஹேரி டெக்டரும் அரைசதம் விலாசி அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
இதனால் 44.5 ஓவர்களில் அயர்லாந்து அணி இலக்கை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் அயர்லாந்து அணி 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக முதல் முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றியும் சாதனைப் படைத்தது.