சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து கெவின் ஓ பிரையன் ஓய்வு!
அயர்லாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக திகழ்பவர் கெவின் ஓ'பிரையன். 37 வயதாகும் இவர் அயர்லாந்து அணிக்காக 153 ஒருநாள் போட்டிகளில் விளையாடிள்ளார். இவர் இன்று ஒருநாள் போட்டியில் இருந்து மட்டும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என தெரிவித்துள்ளார். இதுவரை அயர்லாந்து அணிக்காக 153 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கெவின் ஓ பிரையன் 3,618 ரன்கள் அடித்ததுடன் 114 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
ஓய்வு முடிவு குறித்து கெவின் ஓ'பிரையன் கூறுகையில் ‘‘15 வருடங்களாக அயர்லாந்து அணிக்காக விளையாடிய பின்னர், தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவது சரியான நேரம் என உணர்கிறேன். நாட்டிற்காக 153 முறை ஒருநாள் போட்டியில் விளையாடியது எனக்கு பெருமை. எனது வாழ்நாள் முழுவதும் இது ஞாபகத்தில் இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது இங்கிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் கெவின் ஓ பிரையன் 50 பந்துகளில் சதமடித்து அப்போட்டியில் அயர்லாந்து அணியின் வெற்றிக்கு உதவினார். மேலும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் குறைந்த பந்தில் சதமடித்த வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.