மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட அயர்லாந்து-வெஸ்ட் இண்டீஸ் போட்டி!
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று டப்ளினில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் மற்றும் எவின் லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிராண்டன் கிங் 8 ரன்னிலும், எவின் லூயிஸ் 20 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த கேசி கார்டி மற்றும் கேப்டன் ஷாய் ஹோப் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இருவரும் இணைந்து 80 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் ஷாய் ஹோப் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 49 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அமிர் ஜங்கூவும் 13 ரன்களுடன் நடையைக் கட்டினார். இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேசி கார்டி சதமடித்து அசத்தியதுடன் 13 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 102 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ரோஸ்டன் சேஸ் 24 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னர் ஜோடி சேர்ந்த ஜஸ்டீன் க்ரீவ்ஸ் - மேத்யூ ஃபோர்ட் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூ ஃபோர்ட் அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், 2 பவுண்டரிகள் 8 சிக்ஸர்கள் என 58 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜஸ்டின் க்ரீவ்ஸ் 44 ரன்களை சேர்த்து அணிக்கு ஃபினிஷிக்கைக் கொடுத்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்களைக் குவித்தது. அயர்லாந்து அணி தரப்பில் லியாம் மெக்கர்த்தி 3 விக்கெட்டுகளையும், பேரி மெக்கர்த்தி, ஜோஷுவா லிட்டில் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Also Read: LIVE Cricket Score
அதன்பின் அயர்லாந்து அணி இலக்கை நோக்கி விளையாட இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டி தடைபட்டது. ஒரு கட்டத்தில் மழை நின்று மீண்டும் போட்டியை தொடங்குவதற்கான ஏற்பாடுகளும் நடந்துவந்தது. ஆனால் அதன்பின் மீண்டும் மழை வந்த காரணத்தால் அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அயர்லாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னில் வகித்துவருவது குறிப்பிடத்தக்கது.