CWC 2023 Qualifiers: யுஏஇ-யை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது அயர்லாந்து!

Updated: Tue, Jun 27 2023 19:49 IST
Image Source: Google

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து - ஐக்கிய அரபு அமீரக அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் - அண்டி மெக்பிரைன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 24 ரன்களில் ஆண்டி மெக்பிரையன் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஸ்டிர்லிங்குடன் ஜோடி சேர்ந்த கேப்டன் பால்பிர்னியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. 

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பால் ஸ்டிர்லிங் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 14ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினர். அதேசமயம் மறுபக்கம் கேப்டன் பால்பிர்னி  66 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பால் ஸ்டிர்லிஙும் 8 சிக்சர்கள், 15 பவுண்டரிகள் 162 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஹாரி டெக்டரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 சிக்சர்கள், 4 பவுண்டரி என 57 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய லோர்கன் டக்கர் 19 ரன்களையும், ஜார்ஜ் டக்ரேல் 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு உதவினர். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்களைக் குவித்தது. 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணிக்கு முகமது வசீம் - அயான்ஷ் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அயான்ஷ் 18 ரன்களிலும், விருத்தியா அரவிந்த் 10 ரன்களுக்கும், டிசௌசா 3 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் முகமது வசீமும் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த பசில் ஹமீத் - சஞ்சித் சர்மா இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 39 ரன்களில் ஹமீத்தும், 44 ரன்களில் சஞ்சித்தும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

இதனால் ஐக்கிய அரபு அமீரக அணி 39 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் அயர்லாந்து அணி 138 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை