அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை மகளிர் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து மகளிர் அணியில் தொடக்க வீராங்கனைகள் சாரா ஃபோர்ப்ஸ் 2 ரன்களிலும், கூல்டர் ரெய்லி 24 ரன்களிலும், கேப்டன் ஓர்லா 9 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.

Advertisement

அதன்பின் இணைந்த ஏமி ஹண்டர் - லியா பால் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஏமி ஹண்டர் அரைசதம் கடந்த நிலையில் 66 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் லியா பாலுடன் இணைந்த ரெபேக்கா ஸ்டோகெலும் அபாரமாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இதில் இருவரும் தாங்கள் அரைசதத்தை கடந்த அசத்தியதுடன் 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த லியா பால் 81 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 

Advertisement

அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரெபேக்கா ஸ்டோகெல் 53 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் அயர்லாந்து மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் கவிஷா தில்ஹாரி, அச்சினி குலசூரிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் விஷ்மி குணரத்னே, கேப்டன் சமாரி அத்தபத்து ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின் இணைந்த ஹர்ஷிதா சமரவிக்ரமா மற்றும் கவிஷா தில்ஹாரி இணை அபாரமாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 132 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 53 ரன்களைச் சேர்த்த நிலையில் கவிஷா தில்ஹாரி தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அனுஷ்கா சஞ்சீவனியும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதேசமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்ஷிதா சமரவிக்ரமா தனது முதல் ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

ஆனால் அதன்பின் 11 பவுண்டரிகளுடன் 105 ரன்களைச் சேர்த்த நிலையில் ஹர்ஷிதா சமரவிக்ரமாவும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹாசினி பெரேரா 14 ரன்களிலும், அடுத்து வந்த சஞ்சினி நிசம்சாலா, சுகந்திகா குமாரி, அச்சினி குலசூரிய, அதேஷிகா பிரபோதனி ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை மகளிர் அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அயர்லாந்து அணி தரப்பில் அர்லீன் கெல்லி 3 விக்கெட்டுகளையும், ஜேன் மாகுவேர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்மூலம் அயர்லாந்து மகளிர் அணியானது 15 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த லியா பால் ஆட்டநாயகி விருதை வென்றார். இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News