IREW vs SLW, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி தொடரை சமன்செய்தது அயர்லாந்து!

Updated: Wed, Aug 14 2024 11:32 IST
Image Source: Google

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் அணியானது தற்போது இரண்டு போட்டிகள் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று டப்ளினில் நடைபெற்றது.  இபோட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணிக்கு கேபி லூயிஸ் - ஏமி ஹண்டர் இணை தொடக்கம் கொடுத்தனர்.

இதில் ஏமி ஹண்டர் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினாலும், அடுத்து களமிறங்கிய ஓர்லா பிரெண்டர்காஸ்ட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட்டை இழப்பை தடுத்து நிறுத்தினார். அதேசமயம் மறுமுனையில் கேபில் லூயிஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய ஓர்லா பிரெண்டர்காஸ் 4 பவுண்டரிகள்டன் 38 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

இருப்பினும் மறுபக்கம் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேபி லூயிஸ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின்னரும் அதிரடியாக விளையாடிய கேபி லூயிஸ் இறுதிவரை களத்தில் இருந்ததுடன் 17 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 119 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ரன் அவுட் முறையில் இன்னிங்ஸின் கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் அயர்லாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்தது. இலங்கை தரப்பில் அச்சினி குலசூரிய, ஷஷினி கிம்ஹானி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டார் ஆர்டர் வீராங்கனைகள் விஷ்மி குணரத்னே ஒரு ரன்னிலும், ஹாசினி பெரேரா 10 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த ஹர்ஷிதா சமரவிக்ரமா - கவிஷா தில்ஹாரி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்தினர். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் ஹர்ஷிதா சமரவிக்ராம தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

அதன்பின் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 65 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்ஷிதா சமரவிக்ரமா விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நிலாக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, அமா காஞ்சனா, சசினி நிசன்சலா ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, மறுபக்கம் இறுதிவரை போராடிய கவிஷா தில்ஹாரி தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் 51 ரன்களைச் சேர்த்த நிலையிலும், அணியின் வெற்றிக்கு உதவமுடியவில்லை. இதனால் இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

அயர்லாந்து அணி தரப்பில் ஃப்ரீயா சார்ஜென்ட், ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் அயர்லாந்து மகளிர் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்திய கேபி லூயிஸ் ஆட்ட்நாயகி மற்றும் தொடர்நாயகி விருதுகளை கைப்பற்றி அசத்தினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை