ஐபிஎல் 2022: ஹைதராபாத் அணியின் கேப்டனாக இவர் தான் இருப்பார் - இர்ஃபான் பதான்!

Updated: Tue, Dec 20 2022 13:10 IST
Image Source: Google

கடந்த ஐபிஎல் 15ஆவது சீசனுக்கு முன், 14 கோடி கொடுத்து கேன் வில்லியம்சனை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டனாக தக்கவைத்தது. வில்லியம்சனுக்காக ரஷித் கானையே தூக்கியெறிந்த அந்த அணி, தற்போது 16ஆவது சீசனுக்கு முன், வில்லியம்சனையும் தூக்கியெறிந்துள்ளது. இதனால், அந்த அணி, வரும் 23ஆம் தேதி நடைபெறும் மினி ஏலத்தில் புதுக் கேப்டனாக வாங்கியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

சன் ரைசர்ஸ் அணிக்கு வில்லியம்சனுக்கு அடுத்து, நிகோலஸ் பூரன்தான் கேப்டனாக இருப்பார் எனக் கருதப்பட்டது. ஆனால், அவரையும் அந்த அணி விடுவித்துள்ளது. இந்நிலையில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மினி ஏலத்தில் யாரை வாங்கி கேப்டனாக நியமிக்கும் என்பது குறித்து, முன்னாள் வீரர் இர்பான் பதான் பேசியுள்ளார். 

அதில், “சன் ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட மயங்க் அகர்வால்தான் பொருத்தமானவராக இருப்பார். அந்த அணிக்கு அதிரடி ஓபனர் தேவைப்படுகிறார். அதனையும் இவரால் பூர்த்தி செய்ய முடியும். அணியை சிறப்பாக வழிநடத்தும் தகுதி இவரிடம் இருக்கிறது. கேப்டன்ஸி அழுத்தங்களையும் இவரால் சிறப்பாக சமாளிக்க முடியும்.

இவருக்காக எந்த அணியும் பெரிய அளவில் போட்டிபோட வாய்ப்பில்லை. இதனால், நிச்சயம் இவரை சன் ரைசர்ஸ் அணியால் வாங்க முடியும். பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கேப்டன்ஸி செய்தபோது பயப்படாமல் அதிரடி முடிவை எடுத்தார். இப்படிப்பட்டவர்தான் சன் ரைசர்ஸ் அணிக்கு தேவை. இதனால், சன் ரைசர்ஸ் அணி நிச்சயம் இவரை வாங்கி, கேப்டனாக நியமிக்கும் என உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

கடந்த சீசனில் மயங்க் அகர்வால், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தார். இந்நிலையில், இவரை கழற்றிவிட்டுவிட்டு ஷிகர் தவனை அந்த அணி கேப்டனாக நியமித்துள்ளது. மயங்க் அகர்வால் இதற்குமுன் ஆர்சிபி, டெல்லி, புனே ஆகிய அணிகளுக்கும் விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை