ஜடேஜாவின் இடத்தை அவரால் நிரப்ப முடியாது - இர்ஃபான் பதான்!
இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் ரவீந்திர ஜடேஜா. ஸ்பின் பவுலிங், அதிரடி பேட்டிங், அபாரமான ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் அணிக்கு பங்களிப்பு செய்யக்கூடியவர் ஜடேஜா.
ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் 29 பந்தில் 35 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். ஆனால் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகினார்.
இந்நிலையில், அவருக்கு மாற்று வீரராக அவரை ஒத்த இடது கை ஸ்பின் ஆல்ரவுண்டரான அக்ஸர் படேல் சேர்க்கப்பட்டார். ரவீந்திர ஜடேஜாவிற்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால், வரும் அக்டோபர் - நவம்பரில் நடக்கும் டி20 உலக கோப்பையிலும் அவரால் ஆட முடியாது. அதனால் டி20 உலக கோப்பையிலிருந்தும் ஜடேஜா விலகியுள்ளார்.
ஜடேஜா ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். மிகச்சிறந்த ஆல்ரவுண்டரான ஜடேஜாவின் இருப்பு, அணியின் பேலன்ஸுக்கு வலுசேர்க்கும். அவருக்கு மாற்றாக ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள அக்ஸர் படேல் சரியான மாற்று வீரராக இருந்தாலும் கூட, அவரால் ஜடேஜாவின் இடத்தை நிரப்பமுடியாது என்று முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய இர்ஃபான் பதான், “அக்ஸர் படேல் ரவீந்திர ஜடேஜாவுக்கு சரியான மாற்று வீரர் தான். ஆனால் ஜடேஜாவை பேட்டிங்கில் மேல்வரிசையில் ப்ரமோட் செய்து ஆடவைத்தால் கூட ஆடக்கூடிய அளவிற்கு நல்ல பேட்ஸ்மேன். அக்ஸர் படேலால் அது முடியாது. எனவே ரவீந்திர ஜடேஜாவுக்கு அக்ஸர் சரியான மாற்று வீரராக இருந்தாலும் கூட, ஜடேஜாவின் இடத்தை நிரப்பமுடியாது.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கூட, சூர்யகுமார் யாதவுக்கு முன் ஜடேஜா 4அம் வரிசையில் இறக்கிவிடப்பட்டார். ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் தாக்குப்பிடித்து ஆடி முக்கியமான 35 ரன்களை அடித்து கொடுத்தார். அதை அக்ஸர் படேலால் செய்ய முடியாது” என்று தெரிவித்துள்ளார்.