இஷான் கிஷனிடம் இந்த பிரச்சனை உள்ளது - இர்ஃபான் பதான்!
இந்திய அணி நேற்று இலங்கை அணிக்கு எதிராக சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடி, 213 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்பு பந்துவீச்சில் திறமையாகத் திரும்பி வந்து, 172 ரன்களுக்கு இலங்கை அணியை ஆல் அவுட் செய்தது. இதன்மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியை உறுதி செய்தது.
இந்தப் போட்டியில் பவர் பிளேவில் மிகச் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, பவர் பிளே முடிந்து இலங்கை சுழற் பந்துவீச்சாளர்களிடம் சிக்கி தனது 10 விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இலங்கை தரப்பில் இளம் இடது கை சுழற் பந்துவீச்சாளர் வெல்லாலகே மிகச் சிறப்பாக பந்துவீச்சில் செயல்பட்டார். அவர் இந்திய அணியின் மிக முக்கிய ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி பெரிய நெருக்கடியை உருவாக்கினார்.
அவர் மூன்று இந்திய வலது கை பேட்ஸ்மேன் விக்கட்டை வீழ்த்தியதாலும், அவர் இடது கை சுழற் பந்துவீச்சாளர் என்பதாலும், நேற்றைய போட்டியில் அதை சமாளிக்க இடது கை பேட்ஸ்மேன் இஷான் கிஷான் அனுப்பப்பட்டார். அவரும் அவரை நல்ல முறையில் விளையாடி, முக்கியமான நேரத்தில் தேவையில்லாத ஷாட் விளையாடி அசலங்கா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். கே எல் ராகுல் மற்றும் இஷன் கிசானுக்கு இடையே உருவான பார்ட்னர்ஷிப் மிக முக்கியமானதாக அமைந்தது.
இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா “இஷான் கிஷான் வெல்லாலகே இடம் ஆட்டம் இழக்கவில்லை. அவர் முடிந்த வரையில் நன்றாகவே பேட்டிங் செய்தார். அவர் நேற்று குறிப்பிட்ட பந்துவீச்சாளரை சமாளிக்க நான்காம் இடத்தில் அனுப்பப்பட்டார். ஆனால் அவருக்கு ஒரு விஷயம் எதிராக போகப்போகிறது. அவர் அதிகம் டாட் பந்துகளை விளையாடுகிறார்” என்று தெரிவித்தார்.
நேற்று கிரிக்கெட் வர்ணனையில் இர்ஃபான் பதானும் இதை கூறியிருந்தார். அதில் “ஆடுகளம் சற்று மெதுவாக இருந்தாலும் கூட முதல் 20 ஓவர்கள் தாண்டி, அது விளையாட வேண்டிய நேரம். ஆனால் அதிக டாட் பந்துகள் இஷன் கிஷான் விளையாடினார். இஷான் கிஷான் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வது தொடர்பான அவரது திறமை ஒரு கேள்விக்குறியாகவே இருக்கும்.
கேஎல் ராகுல் பேட்டிங் செய்யும் வரை மிகவும் எளிமையாகப் பந்துவீச்சை சந்தித்து விளையாடிக் கொண்டிருந்தார். சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் கால்களை பயன்படுத்தியும், ஸ்வீப் ஷாட் விளையாடவும் செய்தார். அவருக்கு அத்தகைய திறமை உள்ளது. அவர் ஏன் இந்திய மிடில் ஆர்டரில் கட்டாயம் இடம் பெற்று இருக்க வேண்டும் என்பதற்கான காரணத்தை மீண்டும் ஒருமுறை ஊர்ஜிதம் செய்தார்” என்று கூறியுள்ளார்.