தேவையற்ற விசயங்களில் பாகிஸ்தான் கவனம் செலுத்துவதை விடவேண்டும் - இர்ஃபான் பதான்!
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது மைதானத்தில் இருந்த குறிப்பிட்ட இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானை பார்த்து “ஜெய் ஸ்ரீ ராம்” என கோஷம் எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மைதானத்தில் நடந்த தவறான நடத்தை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வரியம் ஐசிசியிடம் அதிகாரப்பூர்வ புகாரும் அளித்துள்ளது.
இதற்கிடையில் ரசிகர்களின் நடத்தையை பலர் குற்றம்சாட்டினாலும், அதை தீவிரப்படுத்திவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையும் விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதானும் பாகிஸ்தானின் புகார் குறித்து விமர்சனம் செய்துள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வேகப்பந்துவீச்சாளரான இர்ஃபான் பதான், வர்ணனையாளராக பேசிக்கொண்டிருக்கும் போது அவர் இந்திய அணியில் இருந்த போது பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் நடந்த மோசமான சம்பவம் குறித்து விளக்கினார்.
அப்போது பேசிய அவர், “நாங்கள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து பெஷாவரில் ஒரு போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர் ஒருவர் என் மீது ஆணியை வீசினார். அது என் கண்ணுக்கு அடியில் தாக்கியது. ஒருவேளை அது என் கண்ணில் நேரடியாக தாக்கியிருந்தால் நான் பலத்த காயம் அடைந்திருப்பேன். அப்போது ஆட்டம் 10 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது.
ஆனால் நாங்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் அதைப் பொருட்படுத்தவில்லை. அப்போது நடந்த விசயத்தை நாங்கள் பாகிஸ்தான் போல் பெரிதுபடுத்தவில்லை. ரசிகர்கள் நடந்துகொண்டது குறித்து பாகிஸ்தான் பிரச்னை செய்வதை நிறுத்த வேண்டும். அவர்கள் தேவையற்ற விசயங்களில் கவனம் செலுத்துவதை விடுத்து, எப்படி நன்றாக விளையாட வேண்டும். போட்டியில் கவனம் செலுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.