அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை மகளிர் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று பெல்ஃபெஸ்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இலங்கை மகளிர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் சமாரி அத்தபத்து முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹர்ஷிதா மாதவியும் 19 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த விஷ்மி குணரத்னே - ஹாசினி பெரேரா இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விஷ்மி குணரத்னே சதமடித்து அசத்தினார். இதன்மூலம் இலங்கை மகளிர் அணிக்காக சதமடித்த இரண்டாவது வீராங்கனை எனும் சாதனையையும் அவர் படைத்தார்.

Advertisement

அதன்பின் அதிரடியாக விளையாடிய விஷ்மி குணரத்னே 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 101 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து அரைசதத்தை நெருங்கிய ஹாசினி பெரேராவும் 46 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் பெரிதளவில் சோபிக்க தவறியதுடன் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்களைச் சேர்த்தது. அயர்லாந்து அணி தரப்பில் ஓர்லா பிரெண்டர்காஸ்ட் 3 விக்கெட்டுகளையும், அலனா டால்செல், அர்லீன் கெல்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணியிலும் கேப்டன் கேபி லூயிஸ் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த சாரா ஃபோர்ப்ஸ் - ஏமி ஹண்டர் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சாரா ஃபோர்ஸ் 30 ரன்களுக்கும், ஏமி ஹண்டர் 42 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டனர். அவர்களைத் தொடர்ந்து நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஓர்லா பிரெண்டர்காஸ்ட் ஒருபக்கம் அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

ஆனால் மறுபக்கம் விளையாடிய வீராங்கனைகளில் லியா பால் 7 ரன்களிலும், ரெபேக்கா ஸ்டோகெல் 19 ரன்களிலும், ஆர்லீன் கெல்லி 12 ரன்களுக்கும், அலிஸ் டெக்டர் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். ஆனாலும் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ஓர்லா பிரெண்டர்காஸ்ட் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 122 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் அயர்லாந்து மகளிர் அணி 49.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News