IND vs WI: இந்திய அணியில் மேலும் ஒரு வீரர் சேர்ப்பு!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் (பிப்.6) ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் தொடங்கவுள்ளது. இதற்காக தயாராகி வந்த இந்திய அணியில் தற்போது கரோனாவால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
அகமதாபாத்தில் உள்ள இந்திய அணியில் ஷிகர் தவான், ருதுராஜ் கெயிக்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், நவ்தீப் சைனி, அக்ஷர் பட்டேல் என 5 வீரர்கள் உட்பட 8 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. ஓப்பனிங் வீரர்கள் 2 பேருக்கு கரோனா உறுதியானதால், முதல் போட்டியில் இந்திய அணியின் ஓப்பனிங்கிற்கு சிக்கல் உண்டானது. துணைக்கேப்டன் கே.எல்.ராகுலும் தனது தங்கையின் திருமணத்திற்காக சென்றுள்ளார்.
இதனையடுத்து ஓப்பனராக மயங்க் அகர்வால் அணிக்குள் சேர்க்கப்பட்டு, தற்போது தனிமைப்படுத்துதலில் உள்ளார். இந்நிலையில் கூடுதலாக இளம் வீரர் இஷான் கிஷான் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். டி20 தொடருக்காக ஏற்கனவே இருக்கும் இஷான், ஒருநாள் அணிக்குள்ளும் இணைக்கப்பட்டுள்ளார்.
வெளியில் இருந்து அணிக்குள் சேர்க்கப்பட்ட மயங்க் அகர்வால், தற்போது கட்டாய 3 நாள் தனிமைப்படுத்துதளில் உள்ளார். அவரது தனிமைப்படுத்துதல் காலம் சரியாக போட்டி நாளான பிப்ரவரி 6ஆம் தேதியன்று தான் முடிவடைகிறது. எனவே அவரின் உடற்தகுதி அன்று எப்படி இருக்கும் என தெரியாது என்பதால் டி20 அணியில் இருந்து இஷான் கிஷானை சேர்த்துள்ளனர்.
இந்த திட்டத்தை கேப்டன் ரோகித் சர்மா தான் பிசிசிஐயிடம் கேட்டு பெற்றதாக தெரிகிறது. ஏனென்றால் ரோகித் - இஷான் ஜோடி ஏற்கனவே ஐபிஎல்-ல் ஓப்பனிங் இறங்கிய அனுபவம் உள்ளது. இதனால் அவர் தற்போது மற்ற அணி வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இளம் வீரரான இஷான் கிஷான் ஏற்கனவே 2 முறை இந்திய ஒருநாள் அணிக்காக விளையாடியுள்ளார். இலங்கைக்கு எதிரான தனது அறிமுக போட்டியில் 42 பந்துகளில் 59 ரன்கள் விளாசி அசத்தினார். இதனால் அவரை ஓப்பனிங்கிற்கு பயன்படுத்த எந்தவித தயக்கமும் இன்றி டிராவிட் இருப்பதாக தெரிகிறது.