ஆசிய கோப்பை தொடரில் நான் சேர்க்கப்படாதது எனக்கு நல்லது தான் - இஷான் கிஷான் ஓபன் டாக்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இம்மாதம் 27ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி பிசிசிஐ வெளியிட்ட அணியில், காயம் காரணமாக கடந்த சில தொடர்களில் பங்கேற்காமல் இருந்த கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அதாவது ரோஹித் சர்மாவுடன் வழக்கமாக களமிறங்கும் இஷான் கிஷான் அணியில் இடம்பெறவில்லை. மாறாக காயத்தால் பாதித்து ஓய்வில் இருந்த கே.எல்.ராகுல் மீண்டும் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். மற்றபடி வேறு எந்த ஓப்பனிங் வீரரும் அணியில் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில், தான் எதற்காக சேர்க்கப்படவில்லை என்பது குறித்து இஷான் கிஷான் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், “அணி தேர்வாளர்கள் செய்தது நியாயம் என்று தான் நான் நினைக்கிறேன். ஒரு அணியை தேர்வு செய்யும் போது, தேர்வுக்குழு அதிகாரிகள் நிறைய யோசனை செய்த பின்னர் தான் முடிவெடுப்பார்கள். யாருக்கு? எங்கு? வாய்ப்பு தர வேண்டும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.
என்னைப்பொறுத்தவரை இது எனக்கு நல்லது தான். ஏனென்றால் நான் தேர்வாகத் போது தான், நாம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும், நிறைய ரன்களை குவிக்க வேண்டும் என்ற வெறி வருகிறது. என் மீது எப்போது தேர்வுக்குழுவினருக்கு நம்பிக்கை வருகிறதோ, அப்போது தானாக என்னை அணியில் சேர்த்துக்கொள்வார்கள்” என கூறியுள்ளார்.
2022ஆம் ஆண்டில் தற்போது வரை இந்தியாவின் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த 2ஆவது வீரர் இஷான் கிஷான் தான். இதுவரை 3 அரைசதங்களுடன் 430 ரன்களை குவித்துள்ளார். அவரின் சராசரி 30.71 ஆகும். இப்படிபட்ட வீரரை புறகணித்துவிட்டு தான் பந்த், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களை ஓப்பனிங் முயற்சி செய்துள்ளார் ராகுல் டிராவிட்.