டி20 உலகக்கோப்பை: சூர்யாவுக்கு பதில் இஷானை அணியில் எடுக்க வேண்டும் - சல்மான் பட்!
டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் வரும் 24ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. விராட் கோலி தலைமையில் முதல் ஐசிசி கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி களமிறங்குகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அனுபவமும் இளமையும் கலந்த வலுவான அணியாக உள்ளது. இந்திய அணியில் பெரிதும் நம்பிக்கை வைத்து எடுக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் மோசமான ஃபார்மில் இருப்பது கவலையளிக்கும் விஷயம்.
ஐபிஎல் 14வது சீசனில் அமீரகத்தில் நடந்த 2ம் பாகத்தில் 7 போட்டிகளில் வெறும் 144 ரன்கள் மட்டுமே அடித்தார் சூர்யகுமார். அதில் 82 ரன்கள் ஒரே போட்டியில் அடித்தார். மீதம் 6 போட்டிகளில் 62 ரன்கள் மட்டுமே அடித்தார். சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் கவலையளிக்கும் நிலையில், இஷான் கிஷன் நல்ல ஃபார்மில் அபாரமாக ஆடிவருவது இந்திய அணிக்கு நல்ல விஷயம்.
ஐபிஎல்லில் கடைசி ஒருசில போட்டிகளில் அபாரமாக ஆடிய இஷான் கிஷன், இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் 46 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 70 ரன்களை குவித்து ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். ஆனால் சூர்யகுமார் 9 பந்தில் 8 ரன்கள் மட்டுமே அடித்தார்.
இந்நிலையில், டி20 உலக கோப்பையில் சூர்யகுமாருக்கு பதிலாக இந்திய அணி இஷான் கிஷனை ஆடவைக்கலாம் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள சல்மான் பட், “சூர்யகுமார் யாதவின் பேட்டிங் ஃப்ளோ இலங்கையில் இருந்தமாதிரி இப்போதில்லை. ஐபிஎல்லில் அமீரகத்தில் ஒரு இன்னிங்ஸை தவிர மற்ற எதிலும் அவர் சரியாக ஆடவில்லை. அவரது மோசமான ஃபார்ம் தொடரும்பட்சத்தில், நல்ல ஃபார்மில் அபாரமாக ஆடிவரும் இஷான் கிஷனை சூர்யகுமாருக்கு பதிலாக இந்திய அணியில் ஆடவைக்கலாம்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
தற்போதைய ஃபார்மின் அடிப்படையில் இஷான் கிஷனைத்தான் ஆடவைக்க வேண்டும். ஆட்டத்தையே மாற்றக்கூடிய கேம் சேஞ்சர் இஷான் கிஷன். சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக இஷான் கிஷன் ஆடினால், இந்திய அணி மிடில் ஆர்டரில் 2 இடது கை பேட்ஸ்மேன்களைபெறும். இடது - வலது காம்பினேஷனுக்கு அது உதவும்” என்று தெரிவித்துள்ளார்.