டக் அவுட்டாகி மோசமான சாதனை பட்டியலில் இணைந்த இஷான் கிஷன்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிஎற்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய இஷான் கிஷான் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். முன்னதாக நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் விளையாடிய முதல் போட்டியில் சதமடித்து அசத்திய நிலையில், அடுத்த போட்டியில் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்துள்ளார். இதன் காரணமாக அவர் தற்போது மோசமான சாதனை பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார்.
அந்தவகையில் ஐபிஎல் தொடரில் சதமடித்த அடுத்த போட்டியில் முதல் பந்திலேயே டக் அவுட்டான இரண்டாவது வீரர் எனும் மோசமான சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னா சதமடித்த அடுத்த போட்டியில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழந்திருந்தார். இந்நிலையில் தற்போது இஷான் கிஷானும் அவரின் பட்டியாலில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் சதமடித்த அடுத்த போட்டியில் டக் அவுட்டான வீரர்கள்
- இஷான் கிஷன்
- சுரேஷ் ரெய்னா
- ஷேன் வாட்சன்
- மார்கஸ் ஸ்டோய்னிஸ்
- வெங்கடேஷ் ஐயர்
- யூசுப் பதான்
இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். அந்த அணியில் டிராவிஸ் ஹெட்47 ரன்களையும், அனிகெத் வர்மா 36 ரன்களையும், நிதீஷ் ரெட்டி 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களைச் சேர்த்தது. லக்னோ அணி தரப்பில் ஷர்தூல் தாக்கூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்திய நிக்கோலஸ் பூரன் 70 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 52 ரன்களையும் சேர்த்த கையோடு விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அப்துல் சமத் 22 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.