717 நாள்களுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் விக்கெட்டை வீழ்த்திய இஷாந்த் சர்மா - வைரல் காணொளி!
இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் டி20 தொடரில் இன்று டெல்லியில் நடைபெற்று வரும் 28ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. ஆனல் மழை பெய்ததால் தாமதமான இந்த போட்டி ஒரு வழியாக 8.30 மணிக்கு ஓவர்கள் குறைக்கப்படாமல் தொடங்கியது.
இதில் தன்னுடைய முதல் 5 போட்டிகளில் தொடர் தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடும் டெல்லி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தாவுக்கு ஜேசன் ராய் – லிட்டன் தாஸ் ஆகிய வெளிநாட்டு அதிரடி தொடக்க வீரர்கள் களமிறங்கியது அந்த அணி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் மழையால் தார்பாய் கொண்டு மூடப்பட்டிருந்த பிட்ச் எதிர்பார்க்கப்பட்டது போலவே பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்து பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலை கொடுத்தது.
அதற்கு பதில் சொல்ல முடியாத லிட்டன் தாஸ் 4 ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் கடந்த போட்டியில் சதமடித்த போதிலும் இம்முறை டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் ஜேசன் ராய் நங்கூரமாக நின்ற நிலையில் எதிர்ப்புறம் அடுத்து வந்த கேப்டன் நிதிஷ் ராணா 4, மந்தீப் சிங் 12, நம்பிக்கை நட்சத்திரம் ரிங்கு சிங் 6, சுனில் நரேன் 4 என முக்கிய வீரர்கள் அனைவரும் டெல்லியின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் அவுட்டாகி சென்றனர்.
அந்த நிலைமையில் ஜேசன் ராயும் 5 பவுண்டரி 2 சிக்சருடன் போராடி 43 ரன்களில் ஆட்டமிழந்ததால் கொல்கத்தா 100 ரன்களை தாண்டுமா என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. அதனால் அப்போது நங்கூரத்தை போட்ட ஆண்ட்ரே ரஸல் வழக்கத்திற்கு மாறாக மெதுவாக விளையாடி கடைசி நேரத்தில் அதிரடியை காட்டி 1 பவுண்டரி 4 சிக்சருடன் 38 ரன்கள் குவித்து ஓரளவு காப்பாற்றினார். இதனால் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த கொல்கத்தா 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி சார்பில் அதிகபட்சமாக இசாந்த் சர்மா, அண்ட்ரிச் நோர்ட்ஜெ, குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
முன்னதாக இந்த போட்டியில் டெல்லியை சேர்ந்த நட்சத்திர இந்திய வீரர் இஷாந்த் சர்மா 717 நாட்கள் கழித்து முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடியது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. ஒரு காலத்தில் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பந்து வீசி இந்திய அணியில் முக்கிய பவுலராக செயல்பட்டு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர், நாளடைவில் ரன்களை வாரி வழங்கியதால் வெள்ளை பந்து கிரிக்கெட்டிலிருந்து கழற்றி விடப்பட்டார்.
இருப்பினும் கூட டெஸ்ட் அணியில் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடி 2014 லார்ட்ஸ் உட்பட நிறைய மறக்க முடியாத வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவருக்கு சிராஜ், பும்ரா போன்ற அடுத்த தலைமுறை வீரர்கள் வந்து விட்டதால் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இந்நிலையில் கடைசியாக 2021 ஐபிஎல் தொடரில் மே 2ஆம் தேதி விளையாடியிருந்த அவர் 717 கழித்து தன்னுடைய சொந்த ஊரான டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் 4 ஓவர்களில் 19 ரன்களை 4.75 என்ற எக்கனாமியில் மட்டும் கொடுத்து நித்தீஷ் ரானா, சுனில் நரேன் ஆகிய இருவரது விக்கெட்டுகளை எடுத்து தன்னுடைய அனுபவத்தை காட்டி சிறந்த கம்பேக் கொடுத்துள்ளார்.
அதை விட 5 போட்டிகளில் தோற்றதால் இளம் பவுலர் அல்லது வெளிநாட்டு பவுலரை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டேவிட் வார்னர் யாருமே எதிர்பாராத வகையில் சொந்த ஊரின் சூழ்நிலைகளை உணர்ந்த அனுபமிக்க இஷாந்த் சர்மாவை தேர்வு செய்தார். அந்த முடிவை பயன்படுத்திய இசாந்த் சர்மாவும் அபார கம்பேக் கொடுத்துள்ளது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.