PSL 2023: ஃபஹீம் அஷ்ரஃப் அதிரடியால் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி வெற்றி!
பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ராவல்பிண்டியிலுள்ள பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதன்படி களமிறங்கிய கிளாடியேட்டர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் யாஷிர் கான், வில் ஸ்மீட், சர்ஃப்ரஸ் அகமது ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய முகமது நவாஸ் அதிரடியாக விளையாட, மறுபக்கம் நட்சத்திர வீரர் இஃப்திகார் அகமது 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து நவாஸுடன் ஜோடி சேர்ந்த நஜிபுல்லா ஸத்ரானும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
பின் 44 பந்துகளில் 52 ரன்களைச் சேர்த்திருந்த நவாஸ் விக்கெட்டை இழக்க, 34 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 59 ரன்களை எடுத்திருந்த நஜிபுல்லா ஸத்ரானும் ஆட்டமிழந்தார். இறுதியில் உம்ரான் அக்மல அடுத்தடுத்து சிக்சர்களை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 14 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 43 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களைச் சேர்த்தது. இஸ்லாமாபாத் யுனைடெட் அணிதரப்பில் ஃபரூக்கி 3 விக்கெட்டுகளையும், ஃபஹீம் அஷ்ரஃப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இஸ்லாமாபாத் அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் ரன்கள் ஏதுமின்றியும், அலெக்ஸ் ஹேல்ஸ் 12 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் ஷதாப் கான் 8 ரன்கள் மற்றும் முபசிர் கான் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த காலின் முன்ரோ - அஸாம் கான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அதிரடியாக விளையாடிய காலின் முன்ரோ அரைசதம் கடந்த நிலையில், 29 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 63 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து 35 ரன்களைச் சேர்த்திருந்த அசாம் கானும் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஃபஹீம் ஆஷ்ரஃப் 31 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.
இதன்மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 2 விக்கெட் வித்தியாசத்தியில் குயிட்டா கிளாடியேட்டர்ஸை வீழ்த்தியது. இப்போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இருபிரிவிலும் அசத்திய ஃபஹீம் அஷ்ரஃப் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.