ஸ்டோக்ஸின் ஓய்வு ஐபிஎல் தொடருக்கு தான் ஆதாயம் - ஸ்காட் ஸ்டைரிஸ் சாடல்!
இங்கிலாந்து அணியின் உலகக் கோப்பை கனவை நிஜமாக்கிய நாயகர்களில் ஒருவர் பென் ஸ்டோக்ஸ். அந்த நாட்டுக்காக மொத்தம் 105 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் 2924 ரன்கள் மற்றும் 74 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் தற்போது 31 வயதான ஸ்டோக்ஸ், டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும் விதமாக ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்து, தென் ஆப்பிரிக்காவுடானா முதல் ஒருநாள் போட்டிக்கு பின் அதனை செய்தும் காட்டியுள்ளார்.
இந்நிலையில் அவரது ஓய்வு ஒருநாள் கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கான எச்சரிக்கை மணியா என்ற கேள்வி நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் இடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஸ்டைரிஸ், "ஒருநாள் கிரிக்கெட் பார்மெட்டுக்கு எந்தவித சிக்கலும் இல்லை. 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் ஒரே ஒரு ஆண்டு தான் எஞ்சி உள்ளது. 2019 தொடர் எப்படி இருந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவரது ஓய்வு ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு தான் ஆதாயமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
இந்த தொடரில் ஸ்டோக்ஸ் நிச்சயம் இனி விளையாடுவார் என்ற நிலை தான் இப்போது உள்ளது. நிச்சயம் 2019 உலகக் கோப்பை தொடரின் பைனலில் ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் அதற்கடுத்த தொடரில் இல்லாதது இங்கிலாந்துக்கு பெரும் பின்னடைவு தான்" என தெரிவித்துள்ளார்.