‘ரோஹித் சர்மா பார்முக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’

Updated: Sun, Jul 31 2022 10:22 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஜூலை 29-ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. 

இந்த வெற்றிக்கு கடைசி நேரத்தில் 41* ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டாலும் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக 15 ஓவர்கள் வரை அட்டகாசமாக பேட்டிங் செய்த கேப்டன் ரோஹித் சர்மா அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார். மேலும் அந்த 64 ரன்களால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையையும் அவர் படைத்தார்.

இருப்பினும் சமீப காலங்களில் நல்ல தொடக்கத்தை பெற்றாலும் பெரிய ரன்களை எடுக்க முடியாமல் தடுமாறிய அவர் பழைய ஃபார்மின்றி தவித்து வந்தார். குறிப்பாக சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக அவர் ஒரு அரைசதம் கூட அடிக்காதது மும்பைக்கு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு வரலாற்று தோல்வியை பரிசளித்தது.

அந்த நிலைமையில் சமீபத்திய விண்டீஸ் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ரன்களை குவித்து ஃபார்முக்கு திரும்பிய அவர் டி20 உலக கோப்பைக்கு முன்பாக இப்போட்டியை போல பெரிய ரன்களை எடுக்க தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக விராட் கோலியின் பயிற்சியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “சமீபத்திய போட்டிகளில் ரோஹித் சர்மா 1பார்ம் இல்லாததை போல் பெரிய ரன்களை எடுக்க தடுமாறினார். ஆனால் இன்று அவர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். இந்திய கிரிக்கெட்டை பொறுத்த வரை அதன் கேப்டன் ஃபார்முக்கு திரும்பியுள்ளது மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரைப்போலவே தினேஷ் கார்த்திக்கும் தனது வேலையை கச்சிதமாக செய்தார். இன்றைய போட்டியில் அவர் தன்னை பினிஷர் என்று மீண்டும் நிரூபித்து காட்டினார். 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக அவர் உட்பட அனைத்து வீரர்களும் தங்கள் வேலையில் கச்சிதமாக செயல்பட்டு வருகிறார்கள். ரோஹித் சர்மா ஒரு சாம்பியன் வீரர். அவர் பார்மில் இருக்கும் போது உலகிலேயே இதர பேட்ஸ்மேன்களை விட ஆபத்தானவராக தோற்றமளிக்கிறார். எனது வாழ்நாளில் நான் பார்த்த அத்தனை வீரர்களுக்கு மத்தியில் ரோகித் சர்மா மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒருவராக தென்படுகிறார்.

அவர் களத்தில் இருந்தால் போட்டியை எதிரணியிடமிருந்து இந்தியாவின் பக்கம் திருப்பும் திறமையை கொண்டுள்ளார். டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக அவர் பார்முக்கு திரும்பியுள்ளது எதிரணிக்கு கவலையை ஏற்படுத்தும் வகையில் அமையும். அவரது பேட்டியை போலவே கேப்டன்ஷிப் பொறுப்பிலும் அவர் நேர்மறையாக செயல்படுகிறார்” என்று கூறியுள்ள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை