ரிங்கு சிங்கை பாராட்டிய சுனில் கவாஸ்கர்; காரணம் இதுதான்!

Updated: Fri, Apr 14 2023 20:14 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.  கொல்கத்தா அணி தற்போது வரை புள்ளிகள் பட்டியலில் இரண்டு வெற்றிகள் உடன் நான்காம் இடத்தில் இருக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு வெற்றியுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது . 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரை அந்த அணி விளையாடிய 2 போட்டிகளும் மிகவும் பரபரப்பான போட்டியாகவே அமைந்தது . பெங்களூர் அணி உடனான போட்டியில் 89 ரன்களுக்கு ஐந்து விக்கெட் களை இழந்திருந்தபோது சாரதுல் தாகூர் அதிரடியாக விளையாடி அந்த அணியை 200 ரன்களுக்கு மேல் எடுக்க வைத்து வெற்றி பெறச் செய்தார் .

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் 6 பந்துகளில் 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி ஐந்து பந்துகளையும் சிக்ஸர்களாக அடித்து தனது அணிக்கு அசாத்தியமான வெற்றியை சாத்தியமாக்கினார் ரிங்கு சிங். கிரிக்கெட் ரசிகர்களாலும் கிரிக்கெட் விமர்சகர்களாலும் டி20 போட்டிகளின் மிகச் சிறந்த இன்னிங்ஸ் ஆக அவரது ஆட்டம் கொண்டாடப்பட்டு வருகிறது

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கார்லஸ் பிராத்வெயிட் இங்கிலாந்து அணிக்கு எதிராக 2016-ம் ஆண்டு உலகக் கோப்பையின் போது பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் நான்கு சிக்ஸர்களை அடுத்தடுத்து அடித்து ஜெயிக்க வைப்பார் . அதேபோன்று ஒரு ஆட்டம் என இது என பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சுனில் கவாஸ்கர் ரிங்கு சிங் ஆட்டம் பற்றி வெகுவாக பாராட்டி இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய கவாஸ்கர், “நீண்ட நாட்கள் அவருடைய கடினமான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இது. கடைசி ஐந்து பந்துகளில் ஐந்து சிக்ஸர்களை அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வது என்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை. அதற்கு மிகவும் உறுதியான ஒரு மனவலிமை வேண்டும் . மனவலிமையும் திறமையும் ரிங்கு சிங்கிற்கு இருக்கிறது. அத்தனை ரசிகர்களும் உங்களுக்கு எதிராக மைதானத்தில் இருக்கும்போது உங்களால் இது போன்ற ஒரு அதிரடியை காட்ட முடிகிறது என்றால் உங்களது திடமான மனவலிமைக்கு எனது பாராட்டுக்கள்” என தெரிவித்திருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை