இந்த சீசன் எனக்கானதாக இருக்கும் என நம்புகிறேன் - நிக்கோலஸ் பூரன்!

Updated: Tue, Apr 11 2023 13:52 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்புக்கும் ஆச்சர்யத்துக்கும் பஞ்சமில்லாமல் நடந்துகொண்டிருக்கிறது. கணிப்புகள் தலைகீழாக மாறியிருக்கின்றன. கவனம் பெறாத வீரர்கள் கலக்கியிருக்கிறார்கள். போட்டி முடிந்துவிட்டது என நினைக்கையில் ஆட்டம் சூடுபிடித்திருக்கிறது.

இப்படி ஒவ்வொரு போட்டியும் நடந்துகொண்டிருக்க, நேற்றைய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியும் அதே விறுவிறுப்பு குறையாமல் நடந்து முடிந்திருக்கிறது. பெங்களூர் அணியிகன் ஹோம் கிரவுண்டான சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் உற்சாகம், அழுகை, ஏமாற்றம் என கலவையான உணர்வுகளை ரசிகர்களுக்கு வழங்கியிருக்கிறது.

இந்தப்போட்டியில் 200+ சேஸிங்கின் போது லக்னோ அணிக்காக வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து வெற்றிக்கு மிக முக்கிய காரணமாகியிருக்கிறார். ஆட்டநாயகன் விருதையும் வென்றிருக்கிறார். நிக்கோலஸ் பூரன் க்ரீஸுக்குள் வந்த சமயத்தில் லக்னோ அணிக்கு தேவைப்பட்ட ரன்ரேட் 12 க்கும் மேல் இருந்தது. உள்ளே வந்து சிறு தாமதம்கூட இன்றி தன்னுடைய மிஷனைத் தொடங்கினார் பூரன். கரன் சர்மாவிற்கு எதிராக அவர் சந்தித்த முதல் பந்தை டாட் ஆக்கியிருந்தார். 

விக்கெட்டைப் பறிகொடுத்த பந்தை தவிர நிக்கோலஸ் பூரன் டாட் ஆக்கியிருந்த மூன்று பந்துகளில் இதுதான் முதல் பந்து. ஆனால், இந்த டாட்டை ஆடிய அடுத்த பந்திலேயே லாங் ஆனில் ஒரு பெரிய சிக்சரை பறக்கவிட்டிருந்தார். அந்த 2 வது பந்திலிருந்து எல்லாமே அதிரடிதான். எந்த ஒரு பௌலருக்கு எதிராகவும் தயக்கமே இன்றி அதிரடிகளை நிகழ்த்தி ரசிகர்களுக்கு விருந்துபடைத்தார். 

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய நிக்கோலஸ் பூரன், “இந்த ஆட்டத்தை என் மனைவிக்காகவும் என் குழந்தைக்காகவும் சமர்பிக்கிறேன். பிட்ச் பேட்டிங்கிற்கு பெரிதாக உதவியது. ஸ்டாய்னிஸ் நன்றாக விளையாடி சேஸை உயிர்ப்போடு வைத்திருந்தார். கடைசி 4 ஓவர்களில் 50 ரன்களை எடுக்க வேண்டுமானாலும் எங்களால் எடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. நான் எதிர்கொண்ட இரண்டாவது பந்தையே சிக்சராக்கியிருந்தேன். 

பந்து ஸ்லாட்டில் விழும்பட்சத்தில் அதை உறுதியாக சிக்சராக்கிவிட முடியும் என்கிற நம்பிக்கை எனக்கிருந்தது. ஒரு ஆட்டத்தை நின்று வெற்றிகரமாக முடித்துக் கொடுக்க வேண்டும் என எனக்கு நானே ஒருவித சவாலை உருவாக்கிக் கொண்டுதான் கடந்த சில சீசன்களாக விளையாடி வருகிறேன். இந்தப் போட்டியையும் இறுதி வரை நின்று முடித்துவிட வேண்டும் என நினைத்தேன். 

ஆனால், துரதிஷ்டவசமாக அவுட் ஆகிவிட்டேன். இந்த சீசன் எனக்கானதாக இருக்கும் என நம்புகிறேன். முகத்தில் புன்னகையோடு மக்களை என்டர்டெயின் செய்யும் வகையில் விளையாடி அணிக்காக போட்டிகளையும் வென்று கொடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை