இந்திய அணிக்கு அறிமுகமானது அற்புதமான உணர்வு - தீபக் ஹூடா
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. தவான், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட வீரர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இஷான் கிஷன், தீபக் ஹூடா போன்ற வீரர்களுக்கு களம் இறங்கும் வாய்ப்பு கிடைத்தது.
மூன்று போட்டிகளும் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டி கடந்த 6ஆந்தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் ஹரியானாவைச் சேர்ந்த தீபக் ஹூடா ஆடும் லெவன் அணியில் இடம் பிடித்தார். இதன்மூலம் இந்திய அணியில் அறிமுகமானார்.
இவர் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் தற்போதுதான் இடம் கிடைத்துள்ளது. இந்திய அணியில் இடம் பிடிக்கும்போது, விராட் கோலி அல்லது தோனி ஆகியோரில் ஒருவரிடம் இருந்து அறிமுகம் ஆகும்போது வழங்கப்படும் இந்திய அணியின் தொப்பியை பெறுவதுதான் கனவு என்றார்.
இந்த நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகும் போது விராட் கோலியிடம் இருந்து தொப்பியை பெற்றார்.
இதுகுறித்து தீபக் ஹூடா கூறுகையில் ‘‘நான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானது, மிகவும் அற்புதமான உணர்வு. இந்திய அணியின் ஒரு பகுதியாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன். விராட் கோலி அல்லது எம்.எஸ். தோனி ஆகிய ஒருவரிடம் இருந்து இந்திய அணியின் தொப்பியை பெற வேண்டும் என்பது, என்னுடைய சிறு வயது கனவு.
விராட் கோலியிடம் இருந்து தொப்பியை பெற்றது அற்புதமான உணர்வு. கவனச்சிதறலை அப்புறப்படுத்திவிட்டு, என்னுடைய செயலில் கவனம் செலுத்தினேன். விராட் கோலி, ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட் ஆகியோருடன் வீரர்களை அறையை பகிர்ந்து கொண்ட சிறந்த தருணம். அவர்களிடம் இருந்து எப்போதுமே கற்றுக் கொள்ள முடியும்.
அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன். வெளியில் இருந்து வரும் விமர்சனத்தை கண்டு கொள்ளாமல், என்னுடைய செயலில் கவனம் செலுத்துவதையே இலக்காக நிர்ணயித்துள்ளேன்’’ என்று தெரிவித்தார்.