'ஒவ்வொரு போட்டியிலும் மாற்றங்களைச் செய்தால் அது பலிக்காது': கேகேஆர் அணி குறித்து ஹர்பஜன் சிங் கருத்து!

Updated: Mon, Apr 24 2023 18:38 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 33ஆவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரஹானே 71* ரன்களும், டெவன் கான்வே 56 ரன்களும், சிவம் துபே 50 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 235 ரன்கள் குவித்தது.

இதன்பின் 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு பேட்டிங்கில் துவக்கமே சரியாக அமையவில்லை. சுனில் நரைன் (0) மற்றும் ஜெகதீஷன் (1) ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினர். இதன்பின் களத்திற்கு வந்த வெங்கடேஷ் ஐயர் (20) மற்றும் நிதிஷ் ராணா (27) ஆகியோரும் தங்களது பங்களிப்பை செய்து கொடுக்க தவறினர். இதன்பின் களத்திற்கு வந்த ஜேசன் ராய், மொய்ன் அலியின் பந்துவீச்சில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி கொல்கத்தா ரசிகர்களுக்கு வெற்றி நம்பிக்கையை கொடுத்தார்.

ஜேசன் ராய் – ரிங்கு சிங் கூட்டணி, சென்னை அணியின் பந்துவீச்சை சிதறடித்து மளமளவென ரன்னும் குவித்தது. வாணவேடிக்கை காட்டி 19 பந்துகளில் அரைசதம் கடந்த ஜேசன் ராய், 26 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்த போது, தீக்‌ஷன்னாவின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி விக்கெட்டை இழந்தார். ஜேசன் ராய் விக்கெட்டை இழந்தாலும், இறுதி வரை அதிரடி ஆட்டத்தை கைவிடாத ரிங்கு சிங் 33 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், இலக்கு பெரியது என்பதால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்நிலையில், நிதீஷ் ராணாவுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுத்தால், அவர் விரும்பும் அணியை உருவாக்கினால், நிறைய விஷயங்களை கேகேஆர் அணியால் தீர்க்க முடியும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், “நீங்கள் கொஞ்சம் நம்பிக்கை கொடுக்க வேண்டும். இந்த சீசனுக்கான உங்களின் திட்டம் மற்றும் உங்களின் கிரிக்கெட்டை விளையாடும் நோக்கத்துடன் நீங்கள் ஒரு திட்டத்துடன் செல்ல வேண்டும். நிச்சயமாக, எதிர்ப்பை மதித்து, நிபந்தனைகளை மனதில் வைத்து உங்கள் விளையாட்டுத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

ஒரே ஒரு போட்டிக்கான உங்கள் கேம் திட்டத்தை நீங்கள் கடைபிடிக்கிறீர்கள், அடுத்த போட்டியில் வேறு ஏதாவது நடக்கிறது, இன்னும் சில மாற்றங்கள் நடக்கின்றன, ஷர்துல் தாக்கூர் இந்த அணியில் விளையாடவில்லை. எனவே, இது என் புரிதலுக்கு அப்பாற்பட்டது. ஒவ்வொரு போட்டியிலும் மாற்றங்கள் செய்தால் அது பலிக்காது.

அங்கு கேப்டன் மற்றும் நிர்வாகத்தின் பங்கு பெரியதாகிறது. சிஎஸ்கேயில் தோனிக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய முழு ஆதரவு உண்டு. கேப்டன் மீது அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கிறது. அதேபோல, நிதீஷுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுத்தால், அவர் விரும்பும் அணியை உருவாக்கினால், நிறைய விஷயங்களைத் தீர்க்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை